தென்காசி மாவட்டம் செங்கோட்டை விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகன். இவர் தென்காசி பேரூராட்சியின் முன்னாள் தலைவராக இருந்துள்ளார். தற்போது தி.மு.க. பொதுக்குழு உறுப்பினராகவும் உள்ளார். இவருடைய மகன் ராஜேஷ் (வயது 25). இவர் செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் ராஜேஷ் நேற்று காலை சுமார் 11 மணியளவில் பணி தொடர்பாக வெளியில் செல்வதற்காக நகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுத்தியிருந்த தனது இருசக்கர வாகனத்தை எடுப்பதற்காக வந்துள்ளார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அங்கு வந்த 2 மர்ம நபர்கள் திடீரென்று ராஜேஷை மடக்கி அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் உடலின் பல பகுதிகளில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜேஷின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகளை பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் அம்பாசமுத்திரத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் 2 பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் திருநெல்வேலியை சேர்ந்த மந்திரமூர்த்தி (வயது 22), நாங்குநேரியைச் சேர்ந்த மாரி (வயது 19) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் இருவரும் ராஜேஷ் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.