திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே இருக்கும் பா.விராலிப்பட்டி கிராமத்தில் பிரசித்திப் பெற்ற கோட்டை கருப்பண்ணசாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் நேர்த்திக் கடனாக ஆட்டுக் குட்டிகளை விடுவது வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆண்டு முழுவதும் பக்தர்களால் வழங்கப்படும் ஆட்டுக்குட்டிகள் ஆடி மாத திருவிழாவின் போது பலியிட்டு, அதனை சமைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது ஆடி மாதம் திருவிழா தொடங்க உள்ள நிலையில் பக்தர்கள் ஆட்டுக்குட்டிகளை கோயிலுக்கு நேர்த்திக் கடனாக வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோயில் ஆட்டுக் குட்டிகளை நாய்கள் கடித்து குதறும் சம்பவம் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் நாய்கள் கடித்து குதறிய சம்பவத்தில் 30- க்கும் மேற்பட்ட ஆடுகள் பரிதாபமாக பலியாகி உள்ளன.
இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறுகையில், "ஆடுகளை நாய்கள் கடிப்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பல முறை புகார் அளித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பக்தர்கள் கொண்டு வரும் ஆடுகளை வைத்துதான் ஆடி மாத திருவிழா சிறப்பாக நடைபெறும். கடந்த காலங்களில் கோயில் கிராமத்து பொதுமக்கள் வசம் இருக்கும். ஆடுகளை முறையாக பராமரித்து வந்தோம்.
தற்போது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோயில் வந்தவுடன், ஆடுகளை பராமரிப்பதில் அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். எனவே, ஆடுகளை முறையாகப் பராமரிக்க வேண்டும். இல்லையென்றால் கோயிலை கிராம மக்களிடம் மீண்டும் அறநிலையத்துறை ஒப்படைத்து விட வேண்டும்" என கோரிக்கையை வைத்தனர்.