10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நெருங்குவதால் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தொடர் பயிற்சிக்கு தினந்தோறும் செல்வதால் மாணவர்களுக்கு பெரும்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு பயிற்சி முடிந்தால் அடுத்தப்பயிற்சி என தொடர்ந்து ஆசிரியர்கள் செல்வதால் புதியப் பாடத்திட்டம், வினாத்தாள் முறை மாற்றம் போன்ற நிலையில் ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை செய்யவிடாமல் மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயாரவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பேசிய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம், பள்ளிகளில் கற்பித்தல் பணியை தவிர ஏதாவது ஒரு பயிற்சிக்கு ஆசிரியர் செல்லும் நிலையே உள்ளது. மேற்கண்ட பயிற்சிகள் அவசியமானது வரவேற்க கூடியது என்றாலும் அப்பயிற்சிகள் நடத்துவதற்கான காலம் இதுவல்ல. இதனால் தேர்வுகாலங்களில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெரும் பாதிப்புள்ளாகுகின்றனர். ஆசிரியர்களும் குறிப்பிட்ட இலக்கை எட்டமுடியாமல் கற்பித்தலுக்கு வாய்ப்புத் தராததால் மாணவர்களுக்கு வெற்றிப் பாதிக்குமோ என்று மனஉளைச்சலில் உள்ளார்கள். பள்ளிக் கல்வித்துறையின் மாநிலப் பாடத்திட்டத்தில் கற்பிக்கும் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு இப்பயிற்சிகள் வழங்கப்படுவது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்துப் பயிற்சிகளும் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் நடத்திட ஆவண செய்ய வேண்டுகின்றோம். மேலும் பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள் பாதிக்கப்படுவதால் தற்போது ஆசிரியர்களுக்கு வழங்கும் அனைத்துவகை பயிற்சிகளும் ரத்துசெய்திடும்படி பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.