Skip to main content

கல்லூரிப் பேருந்து மோதி பள்ளி ஆசிரியை தலை நசுங்கி பலி!

Published on 22/04/2023 | Edited on 22/04/2023

 

Teacher passed away in college bus collision

 

வீரகனூர் அருகே, தனியார் கல்லூரிப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனம் ஓட்டிச்சென்ற தனியார் பள்ளி ஆசிரியை பரிதாபமாக பலியானார்.  கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அருகே உள்ள சிறுவாகம்பூரைச் சேர்ந்தவர் செல்வமணி (34). இவர், சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.  இவருடைய மனைவி சத்தியபிரியா (23). இவர், உள்ளூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஏப். 20 ஆம் தேதி, சத்தியபிரியா தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு, சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள வீ.ராமநாதபுரத்திற்கு வந்திருந்தார். குழந்தைகளை தாய் வீட்டிலேயே விட்டுவிட்டு, இருசக்கர வாகனத்தில் தான் பணியாற்றும் பள்ளிக்குக் கிளம்பிச் சென்றார்.    

 

வீரகனூரை அடுத்த புளியகுறிச்சி பிரிவு சாலையில் ஒரு திருப்பத்தில் வாகனத்தை அவர் திருப்பினார். அப்போது தலைவாசலில் உள்ள ஒரு  தனியார் பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த பேருந்து, சத்தியபிரியா ஓட்டிச்சென்ற வாகனத்தின் மீது மோதியது. இதில், பேருந்தின் முன்சக்கரத்தில் சிக்கிய சத்தியபிரியா, நிகழ்விடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக பலியானார். விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் கீழே குதித்து, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சத்தியபிரியாவின் உறவினர்கள் நிகழ்விடத்திற்கு விரைந்தனர். மகளின் சாவுக்குக் காரணமான கல்லூரி பேருந்து ஓட்டுநரை உடனடியாக கைது செய்யக்கோரி, தலைவாசல் - வீரகனூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த  சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வீரகனூர் காவல்நிலைய எஸ்ஐ அந்தோணி மைக்கேல் தலைமையிலான காவல்துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்குள் ஆத்தூர் டிஎஸ்பி நாகராஜும் அங்கு விரைந்தார். அவரும் பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் பேசினார். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கூராய்வு முடிந்த பிறகு சத்தியபிரியாவின் சடலத்தை பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.  சத்தியபிரியாவின் மரணத்துக்குக் காரணமான கல்லூரி நிர்வாகத்தினர் உரிய இழப்பீடு வழங்கக்கோரி, உறவினர்கள் மீண்டும் தலைவாசல் வீரகனூர் தேசிய நெடுஞ்சாலையில் சடலத்தைக் கிடத்தி வைத்து மறியலில் ஈடுபட்டனர். 

 

இதனால் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, போராட்டத்தைக் கைவிட்டனர். சத்தியபிரியாவின் சடலம், அவருடைய கணவரின் சொந்த ஊரான கடலூருக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்த பரபரப்புக்கு இடையே, விபத்தை ஏற்படுத்திய தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் குமரேசனை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தையொட்டிய உறவினர்கள் மறியல் போராட்டத்தால் கெங்கவல்லி, வீரகனூர் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.  

 

 

சார்ந்த செய்திகள்