திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது தாண்டிக்குடி மலைக் கிராமம். இதனைச் சுற்றியுள்ள ஆடலூர், பன்றிமலை, கே.சி.பட்டி, பெரும்பாறை பகுதிகளில் கடந்த சில வருடங்களாக சுற்றித் திரியும் யானைகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் காப்பி, மிளகு, ஏலக்காய் மற்றும் மலைவாழை மரங்களை அதிக அளவில் யானைகள் சேதப்படுத்தி வருகின்றன.
இதை பற்றி அப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் வனத்துறையினரிடம் முறையிட்டனர். அதன் அடிப்படையில் வனத்துறையினரும் எவ்வளவோ முயற்சி செய்தும் யானைகளை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை. ஒற்றை யானை மற்றும் இரண்டு யானைகள் மட்டுமே சுற்றி வந்த நிலையில் தற்போது எட்டு யானைகள் கூட்டமாக தடியன்குடிசை தோட்டக்கலைத்துறை நறுமண சுற்றுலா தளத்திற்கு நேற்று மாலை இடம் பெயர்ந்தன.
அப்போது அங்குள்ள வாழை மற்றும் நறுமணப் பயிர்களை பலமாக சேதப்படுத்தின. நேற்று இரவு வத்தலகுண்டு தாண்டிக்குடி சாலையில் தடியன்குடிசை பகுதியில் ஐந்து யானைகள் சாலையிலிருந்து அகலாமல் நின்றுள்ளன. இதனை அறிந்த வனத்துறையினர் தாண்டிகுடிலிருந்து வாகனங்களை எதுவும் கீழே செல்ல விடாமல் நிறுத்தி வைத்தனர்.
ஆனால் வத்தலக்குண்டில் இருந்து மேலே சென்ற வாகனங்களுக்கு யானைகள் இருக்கும் தகவல் தெரியவில்லை. இதனை அறியாத தாண்டி குடியைச் சேர்ந்த டீக்கடைக்காரர் சூப் சுப்பிரமணி, தனது கடைக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு இரு சக்கர வாகனத்தில் தாண்டிக்குடி மலை சாலையில் சென்றுள்ளார்.
திடீரென சாலையின் குறுக்கே யானைக்கூட்டம் நிற்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் சுப்பிரமணி. சுதாரிப்பதற்குள் யானை ஒன்று சுப்பிரமணியன் இருசக்கர வாகனத்தை வேகமாக பிடித்து இழுத்துள்ளது. அதிர்ச்சியில் உறைந்து போன சுப்பிரமணி, கணேசா... காப்பாத்து... என கதறியப்படி இருசக்கர வாகனத்தை யானைகளிடமே விட்டுவிட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடியுள்ளார்.
யானைகள் இருசக்கர வாகனத்தை பந்தாடி சின்னாபின்னமாக்கின. இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி தாண்டிக்குடி திமுக ஊராட்சி செயலாளர் மகேஷ் கூறும்போது, தாண்டிக்குடி மலைப்பகுதியில் ஆடலூர், பன்றிமலை ஆகிய பகுதியில் மட்டுமே இருந்து வந்த யானைகள் தற்போது நேர்மலை கூட்டு காடு பகுதியிலும் பெரும்பாறை தடியன்குடிசை பகுதிகளிலும் கூட்டம் கூட்டமாய் வந்து விளைநிலங்களை சேதப்படுத்துவதோடு விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன. யானை கூட்டங்கள் அனைத்தும் குடியிருப்பு பகுதியில் அருகாமையிலேயே வந்துவிட்டதால் மலைக்கிராம மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து யானை கூட்டத்தை வேறு இடங்களுக்கு இடப்பெயர்ச்சி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் சார்பில் வேண்டுகோள் விடுப்பதாக கூறினார்.