
இறந்த முன்னோர்களுக்காக ராமேஸ்வரம் சென்று திரும்பிய பொழுது காரும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காரைக்குடியை சேர்ந்தவர்கள் தங்களுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை நினைத்து திதி மற்றும் தர்ப்பணம் செய்துவிட்டு சாமி தரிசனம் செய்த பின், மீண்டும் காரைக்குடியை நோக்கி டாடா சுமோ காரில் சென்றனர்.
மதுரையிலிருந்து வடமாநில பக்தர்களை ராமேஸ்வரத்திற்கு சாமி தரிசனத்திற்காக அழைத்து வந்த மினி வேன் ராமநாதபுரம் அருகே உள்ள குயவன்குடி பகுதியில் வந்தபோது எதிரே வந்த சுமோ காரில் நேருக்கு நேர் மோதியது.
இதில் சுமோ காரில் இருந்த மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த சித்தி விநாயகத்தின் மகன்கள் சாய் ராம் மற்றும் திருகுமரன் ஆகிய இரண்டு சிறுவர்களும் அம்பிகா என்ற பெண்ணும் மற்றும் சிறுவனுடைய தாத்தா ஆகிய நான்கு பேர் உடல் நசுங்கி பலியாகினர்.
இதனை அடுத்து அப்பகுதிக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டதுடன் காயமடைந்த 10 க்கும் மேற்பட்டவர்களை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து சம்பவத்தால் மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் விபத்து குறித்து கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.