தேசிய நெடுஞ்சாலைகளையொட்டி இருந்த டாஸ்மாக் கடைகளை உச்சநீதிமன்றம் உத்தரவையடுத்து அந்த கடைகள் மாற்றப்பட்டது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. இதனால் அடுத்தடுத்து இருந்த கடைகள் மூடப்பட்டதால் குடிமகன்கள் பெரும் அவதிப்பட்டன. இதனால் பல்வேறு ஊர்களில் குடிமகன்கள் பல கி.மீ தூரத்திற்கு சென்று மது குடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் பூட்டப்பட்ட அந்த கடைகளை மாற்று இடங்களில் திறக்க தமிழக அரசும் டாஸ்மாக் நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக குடியிருப்புகள், பள்ளி கல்லூரிகள், வழிப்பாட்டு தலங்கள் உள்ள இடங்கள் இருந்தாலும், அதைப்பற்றி கவலைப்படாமல் டாஸ்மாக் கடைகளை திறக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
அதன் தொடர்ச்சியாக நாகர்கோவில் கோட்டார் செட்டித்தெருவில் தனியார் கட்டிடத்தில் டாஸ்மாக் கடை திறக்க அதிகாரிகள் அனுமதி அளித்ததால், அங்கு கடை திறக்க ஊழியர்கள் நடவடிக்கை எடுத்தனர். அந்த கடை திறக்க இருந்த பகுதி நெருக்கமான குடியிருப்புகளும், கல்வி நிலையங்களும் உள்ள பகுதி என்பதாலும், டாஸ்மாக் கடையை கடந்து தான் செல்ல வேண்டியிருக்கும். இதனால் அங்குள்ள மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கடை திறக்ககூடாது என்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனுவும் கொடுத்துள்ளனர். ஆனால் ஆட்சியர் அதை கொஞ்சமும் பொருட்படுத்தால் கடையை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் கடை முன் திரண்டு கடையை திறக்க விடாமல் தடுத்தனர்.
இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு, கடையை முற்றுகையிட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இது குறித்து பெண்கள் கூறுகையில், டாஸ்மாக் கடை திறந்தால் போதை ஆசாமிகளால் குடியிருப்புகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன் பெண்களுக்கும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு கேள்வி குறியாகிவிடும் என்றனர். இதற்கிடையே மது பானத்தை ஏற்றி வந்த டெம்போவை போலீசார் திருப்பி அனுப்பினார்கள். இதனால் டாஸ்மாக் கடைக்கு வந்த ஊழியர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.