சென்னையைச் சுற்றியுள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் வாகனங்களுக்கான சுங்கக்கட்டணம் ரூபாய் 5 முதல் ரூபாய் 55 வரை உயர்த்தப்படவுள்ளது. அதன்படி, வானகரம், சூரப்பட்டு, பட்டரைபெரும்புதூர், நல்லூர் ஆகிய நான்கு சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளை அகற்ற தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில், இந்த இரண்டு சுங்கச்சாவடிகளில் தற்போது கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. திருத்தணி அருகே உள்ள பட்டரைபெரும்புதூர் சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கான கட்டணம் ரூபாய் 30- லிருந்து ரூபாய் 35 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இலகுரக வர்த்தக வாகனம், மினி பேருந்திற்கான கட்டணம் ரூபாய் 45- லிருந்து ரூபாய் 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள், ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூபாய் 70- லிருந்து ரூபாய் 90 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பேருந்து மற்றும் டிரக் உள்ளிட்ட வாகனங்களுக்கான கட்டணம் ரூபாய் 95- லிருந்து ரூபாய் 125 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பெரிதாக்கப்பட்ட வாகனங்களுக்கான கட்டணம் ரூபாய் 185- லிருந்து ரூபாய் 240 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் சூழல் சுங்கக்கட்டணத்தையும் அதிகரிப்பது விலைவாசியை மேலும் உயர்த்தக்கூடும் என கவலை எழுந்துள்ளது.