
சென்னையில் உள்ள பல்லவன் இல்லத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், "பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய பேருந்துகளில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ் பேருந்துகளில் கேமரா பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பேருந்து வழித்தடங்களை அறிந்துகொள்ள 'சலோ' செயலியை விரைந்து செயல்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பெண்கள் கட்டணமின்றி செல்லக்கூடிய வகையில் நகரப் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். படுக்கை வசதிகளுடன் கூடிய அரசு பேருந்துகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைத் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
முன்னதாக, பல்லவன் இல்லத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் இன்று (13/05/2021) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.