Skip to main content

வறுமையை பயன்படுத்தும் முதலாளிகள்!! 23 கொத்தடிமைகள் மீட்பு!!

Published on 30/08/2018 | Edited on 30/08/2018

 

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த பெரியகிராமம் பகுதியில் கடந்த 4 வருடங்களாக கொத்தடிமைகளாக இருந்து மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்த 23 பேரை வருவாய்துறையினர் மீட்டனர்.

 

காவேரிப்பாக்கம் அடுத்த பெரியகிராமம் பகுதியை சேர்ந்தவர் 37 வயதான  காதர்பாஷா. இவர் அதே பகுதியில் மரக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து 5 குடும்பங்களை கொத்தடிமைகளாக அழைத்து வந்து முன் தொகையாக 5000 கொடுத்து மரம் வெட்டும் வேலையில் ஈடுபடுத்தி வந்துள்ளார். உரிய கூலி வழங்காத காதர்பாஷா வாரம் ஒரு குடும்பத்திற்கு 100 ரூபாய் மட்டுமே கொடுத்து வந்ததோடு அவர்களை தரக்குறைவாக பேசியும் மிரட்டியும் வந்துள்ளார். 

 

 

 

இதுக்குறித்து காவல்துறைக்கும், வருவாய்த்துறையினருக்கும் போன் மூலம் தகவல் கூறியுள்ளனர் சிலர். இதுப்பற்றிய தகவல் அறிந்த இராணிப்பேட்டை கோட்டாட்சியர் வேணுசேகரன் அந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது அங்கு கொத்தடிமைகளாக 5 குடும்பத்தை சேர்ந்த 23 பேர் இருந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அனைவரையும் மீட்ட வருவாய் துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

அதோடு அவர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுப்பட்டுள்ளனர். கொத்தடிமையாக இருப்பவர்களுக்கு அரசு தரும் ஊக்கத்தொகை வழங்கவும் முடிவு செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய காதர்பாஷாவினை நெமிலி போலீசார் தேடிவருகின்றனர்.

சார்ந்த செய்திகள்