தமிழ்நாடு முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தினமும் ஒவ்வொரு துறை சார்ந்த மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விக்கு, துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளித்துவருகின்றனர். அந்த வகையில், சுற்றுலாத் துறைக்கான மானியக் கோரிக்கை மீது இன்று (04.09.2021) விவாதம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், பல முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
அந்த அறிவிப்பில், 'சென்னை மெரினா கடற்கரையில் படகு சவாரி தொடங்கப்படும்; முட்டுக்காடு பகுதியில் மிதவை படகுடன் கூடிய உணவகம் அமைக்கப்படும்; ஒகேனக்கல் மற்றும் ஜவ்வாது மலைப்பகுதியில் பல்வேறு வசதிகளுடன் கூடிய சுற்றுலாத்தளமாக மேம்படுத்தப்படும்; ராமேஸ்வரம் - கன்னியாகுமரி இடையே சொகுசு கப்பல் மற்றும் படகு சேவை தொடங்குவது தொடர்பாக ஆய்வு செய்யப்படும்" என பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.