திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் பல் வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அம்மா முன்னேற்ற கழகத்தின் மாநில செயலாளரும் ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் திண்டுக்கல் வந்தார். அதையொட்டி பெருந்தலைவர் காமராஜரின் 116 வது பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதற்கு முன்பு பிரபல ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்த டிடிவி தினகரன் பத்திகையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்த போது.....’’தற்பொழுது தமிழகத்தில் நடைபெறும் எடப்பாடி அரசு கோமா நிலையில் உள்ளது. தற்பொழுது முட்டையில் மட்டும் ஊழல் செய்யவில்லை. எல்.இ.டி.பல்பு உள்பட அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. இப்படிப் பட்ட எடப்பாடி ஆட்சியின் நாட்கள் தான் எண்ணப்பட்டு வருகிறது. அமைச்சர் வேலுமணி பொய்யான தகவலை தந்து கொண்டு இருக்கிறார்.
மறைந்த முதல்வர் அம்மா தலைமையில் நடந்த வெற்றியை போல் வருகிற பாராளுமன்ற தேர்தலில் 37 தொகுதிகளிலும் அதன் பின் சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களை அம்மா முன்னேற்ற கழகம் வெற்றி பெறும். இதின் மூலம் அடுத்த பிரதமரை தேர்ந்து எடுக்கும் சக்தியாக உருவெடுப்போம் மத்திய அரசு தமிழக அரசை ஊழல் அரசு என குற்றம் சாட்டி வருகிறது. அப்படி இருக்கும் போது எதற்காக ஆட்சி நடைபெற அனுமதிக்கிறது என தெரிய வில்லை.
இனி எந்த காலத்திலும் தமிழகத்தில் தேசிய கட்சி ஆட்சிஅமைக்க முடியாது. லோக் ஆயுக்தா சட்டம் பல் இல்லாத பாம்பாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் சமயத்தில் ஸ்லீப்பர் செல்கள் வெளிவருவார்கள். தற்பொழுது எடப்பாடி போட துடிக்கும் எட்டு வழி சாலை மக்களுக்கான திட்டம் கிடையாது. ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள் சொந்த தேவைக்காக நிறைவேற்ற துடிக்கிறார்கள் என்று கூறினார். அதன் பின் நகரில் சில நிகழ்சியில் கலந்து கொண்டு விட்டு செம்பட்டி, வத்தலக்குணடு வழியாக தேனி சென்ற டிடிவி தினகரனுக்கு அங்கங்கே கட்சி தொண்டர்கள் பெரும் வரவேற்பு கொடுத்தனர். டிடிவியோடு தங்க தமிழ் செல்வன், திண்டுக்கல் புற நகர் மாவட்ட செயலார் ராமுத்தேவர் உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.