நாளை முதல் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இப்படி பள்ளி கூடங்கள் திறந்த முதல் நாளே ( 3 ம்தேதி ) பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச பாடபுத்தகங்கள் வழங்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும், கல்வி துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் அதிரடி உத்தரவும் பிறப்பித்து உள்ளனர். அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களும் இருக்கும் ஆரம்பபள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல் நிலைப்பள்ளிகளுக்கு இலவச பாடபுத்தகங்களும் வந்து அந்தந்த பள்ளிகளில் இறக்கியும் வைத்துள்ளனர்.
இதில் 1,2 மற்றும் 6,7 பாடபுத்தகங்கள் அதிகம் அளவிலும் வந்து இருக்கிறது. நாளை பள்ளி கூடங்கள் திறந்த உடனே பாடபுத்தகங்களை வாங்கவும் மாணவ, மாணவிகள் தயாராகவும் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தான் எடப்பாடி அரசு திடீரென தமிழகத்தில் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் வாய்மொழி உத்தரவாக நாளை பள்ளிக்கூடம் திறக்கும் நாளான 3ம்தேதி கலைஞர் பிறந்த நாள் வருவதால் அன்று இலவச பாட புத்தங்களை மாணவ மாணவிகளுக்கு கொடுக்க வேண்டாம். மறுநாள் 4ம்தேதி அந்த புத்தகங்களை மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியரை வழங்க சொல்லுங்கள். அதிலும் மதியத்திற்கு மேல் வழங்க வேண்டும் என உத்திரவு பிறப்பித்து உள்ளனர்.
அதன் அடிப்படையில் முதன்மை கல்வி அதிகாரிகளும் (CEO ) நகரம் முதல் குக்கிராமங்கள் வரை இருக்க கூடிய பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு சர்க்குலரும் அனுப்பியதுடன் மட்டுமல்லாமல் போன் போட்டு நாளைக்கு இலவச பாடபுத்தகங்களை மாணவ, மாணவிகளுக்கு கொடுக்க வேண்டாம் என வலியுறுத்தி இருக்கிறார். அதைக் கண்டு ஆசிரியர்களே மனம் நொந்து போய் வருகிறார்கள். தலைவர் கலைஞர் பிறந்த நாளைக்கும் இலவச பாடபுத்தங்களை மாணவ மாணவிகளுக்கு கொடுப்பதற்கும் என்ன சம்மந்தம் இருக்கு. இதிலயும் இந்த எடப்பாடி அரசு அரசியல் பண்ண ஆரம்பித்து விட்டனர் என்ற குமுறல் ஆசிரியர்கள் மத்தியிலையே பேசப்பட்டும் வருகிறது.