மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு தரும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் ஆளுநரை நேரில் சந்தித்து, 7.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்குமாறு வலியுறுத்தினர். அதன் தொடர்ச்சியாக, இடஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்கக்கோரி, தமிழக ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அனுமதியளிக்கக் கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். இதில், அ.தி.மு.க அரசுடன் இணைந்து போராட தி.மு.க தயார். கட்சிகளுடன் பேசி போராட்டத்தை அறிவிக்க முதல்வர் பழனிசாமி முன்வர வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எழுதியுள்ள கடிதத்தையும் இணைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.