சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. கட்சியின் தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி, "அ.தி.மு.க. கட்சியை வழிநடத்த அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அடங்கிய 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை" அறிவித்தார். அதைத்தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், "2021- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி" என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் இன்று மாலை 06.00 மணிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசுகிறார் தற்போதைய தமிழக முதல்வரும், அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளருமான எடப்பாடி பழனிசாமி.
அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளராக அறிவித்ததற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி கூறுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் கூறுகின்றன.