தமிழக முழுவதும் கரோனா தாக்கம் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. பதினோரு மாதங்களுக்குப் பிறகு, கடந்த 8ஆம் தேதி 11ஆம் வகுப்பு மற்றும் 9ஆம் வகுப்புகள் துவக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிக்குச் சென்றனர். தற்போதும், உருமாற்றம் பெற்ற கரோனா பரவிவிடும் என்ற அச்சம் இருக்கிறது.
இந்நிலையில், கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர் சேவை. ராஜேந்திரன், பெண்ணாடம் அருகில் உள்ள இறையூரில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார்.
இவர், இறையூரில் உள்ள அருணா மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்குத் தரமான முகக்கவசம் தயார்செய்து வழங்கியுள்ளார். அந்த முகக்கவசத்தில் முதல்வரின் படம், அதிமுகவின் சிம்பல், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு என்று பொறிக்கப்பட்டுள்ளது. அந்த முகக்கவசத்தை பள்ளி மாணவ மாணவிகள் வாங்கி அணிந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், அதிமுக ஒன்றியச் செயலாளர் முத்து அருணா, பள்ளி தலைமை ஆசிரியர் கோபி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மணிகண்டன் மற்றும் ரீகன் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதேபோன்று பெண்ணாடம் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளிலும் முகக் கவசம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்துவருகிறார்.
கரோனா தாக்கம் அதிகமாக இருந்த நேரத்தில், இதேபோன்று தரமான முகக் கவசங்கள் தயார்செய்து தனது இ-சேவை மையத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.