Skip to main content

'பெரிய நாடுகள் கூட திணறுகின்றன'- முதல்வர் பழனிசாமி பேச்சு!

Published on 25/06/2020 | Edited on 25/06/2020


 

tamilnadu cm palanisamy press meet in coimbatore district

 

கோவையில் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

 

அப்போது அவர் கூறியதாவது, "அரசின் வழிமுறைகளைப் பின்பற்றியதால் கோவை மாவட்டத்தில் கரோனா கட்டுக்குள் உள்ளது. கரோனா பரவலை தடுக்க கோவை மாவட்ட நிர்வாகம் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கோவையில் நாளொன்றுக்கு இரண்டாயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. கோவை மாவட்டத்தில் 36,905 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நீர் பாசனம் போன்ற விவகாரங்களில் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கோவை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் அரசின் திட்டப்பணிகள், கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடைபெறும். 

 

சிறு, குறு, நடுத்தர தொழில்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசிடம் இருந்து நிதியுதவி பெற்றுத் தரப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வளர்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு செய்து வருகிறேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும். கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்றால் ஸ்டாலின் அதையும் குறைகூறுகிறார். சோதனையான நேரத்தில் அரசுக்கு ஆதரவு அளிக்காமல் தவறான குற்றச்சாட்டை கூறுகிறார் ஸ்டாலின். நாட்டிலேயே நோயை வைத்து அரசியல் செய்து வரும் ஒரே தலைவர் ஸ்டாலின். கரோனாவுக்கு ஒரே மருந்து அனைவரும் கட்டுப்பாடுடன் இருப்பதுதான் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

 

தான் அரசியலில் இருப்பதை தெரிவிக்கவே நாள்தோறும் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார் ஸ்டாலின். அரசியல் ரீதியாக அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் செயல்படுகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். எந்த மாநில எதிர்க்கட்சித் தலைவரும் ஸ்டாலின் போல் அரசியலுக்காக செயல்படவில்லை. கரோனா பரவலை தடுக்க அரசுக்கு ஸ்டாலின் என்ன ஆலோசனைகளை கூறியிருக்கிறார்? எந்த வழிமுறைகளையும் கடைப்பிடிக்காமல் திமுகவினர் நிவாரண உதவி வழங்கியதால் தொற்று அதிகரித்துள்ளது. அங்கொன்றும், இங்கொன்றும் விளம்பரத்திற்காக திமுக நிவாரணம் வழங்கியது. ஸ்டாலின் உத்தரவை ஏற்று நிவாரணப் பணிகள் செய்த ஒரு திமுக எம்எல்ஏவை நாம் இழந்திருக்கிறோம். மருத்துவ நிபுணர் குழு அறிவுரைகளைப் பின்பற்றியிருந்தால் ஒரு எம்எல்ஏவை இழந்திருக்க அவசியமில்லை. அதிகாரிகள் மூலம் நிவாரணப்பணிகளை திமுக வழங்கியிருந்தால் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது. உண்மைக்கு புறம்பான பொய்யான செய்திகளை மு.க.ஸ்டாலின் பரப்பி வருகிறார். 

 

அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி போன்ற நாடுகள் கூட திணறுகிறது, ஆனால் தமிழகத்தில் கட்டுக்குள் உள்ளது. 90 நாட்கள் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதால்தான் கரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது. தமிழகத்தில் கரோனா தொற்று சமூக பரவல் நிலையில் இல்லை. கூட்டுறவு வங்கிகளை ஆர்.பி.ஐ. கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது பற்றி முழு அறிக்கை கிடைக்கவில்லை. வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் கனிவாக நடந்துக்கொள்ள காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளேன். சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இறந்த விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு செயல்படுத்தப்படும்". இவ்வாறு முதல்வர் பேசினார். 

 

சார்ந்த செய்திகள்