தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது தமிழக அரசு. அதன்படி, தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள சலூன் கடைகள், அழகு நிலையங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. அதேபோல் திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்டவையும் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று (28/04/2021) மாலை 05.00 மணிக்கு தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சந்திக்கிறார். கரோனா தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக ஆளுநரை நேரில் சந்தித்து தமிழக தலைமைச் செயலாளர் விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தச் சந்திப்பில், தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனும் தமிழக காவல்துறை டி.ஜி.பி. திரிபாதியும் பங்கேற்க உள்ளனர்.