
தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா பாதிப்பு குறைந்துவருகிறது. எனினும், சென்னையில் கரோனா உயிரிழப்பு அதிகரித்துவரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இந்நிலையில், சேலம், திருப்பூர், திருச்சி, கோவை உட்பட பல மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. குறிப்பாக, தொழில் நகரமான கோவையில் சென்னையைவிட கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்த மாவட்டத்தில் நேற்று (27.05.2021) ஒரேநாளில் 4,734 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், வரும் மே 30ஆம் தேதி மீண்டும் கோவை மாவட்டத்திற்குச் செல்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
இதனிடையே, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு தனி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டம் - மு.அ.சித்திக் இ.ஆ.ப., திருப்பூர் மாவட்டம் - சமயமூர்த்தி இ.ஆ.ப., ஈரோடு மாவட்டம் - டாக்டர் செல்வராஜ் இ.ஆ.ப. ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.