தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகளுடன் சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் உமேஷ் சின்ஹா, "மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்தோம். கரோனா தொற்று பரவாத வகையில் தேர்தல் நடத்துவதே தேர்தல் ஆணையத்தின் நோக்கம். கரோனா வழிகாட்டுதல்களுடன் சிறப்பான முறையில் பீகார் சட்டமன்றத் தேர்தல், இடைத்தேர்தல்களை நடத்தியுள்ளோம். ஊரகப் பகுதி உட்பட அனைத்து பகுதிகளிலும் அனைவரையும் வாக்களிக்கச் செய்வதே இலக்கு.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. வாக்குச்சாவடி முகாம்களில் கரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படும். தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக சாய்வு தளங்கள் மருத்துவ வசதிகள், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு வசதி செய்து தரப்படும். விருப்பப்படும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று மரபுப்படி தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும். பணப்பட்டுவாடா, பரிசுப்பொருள் விநியோகம் போன்ற விதிமீறல்களை தேர்தல் ஆணையம் கண்காணிக்கும். பெரும்பாலான கட்சிகள் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்த கோரிக்கை விடுத்துள்ளன. அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் செலவினம் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பவர்களைக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மூன்று ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றுபவர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுமா என்பது பற்றி தற்போது எதுவும் கூற முடியாது. 1,000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி வீதம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். நடப்பு சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24- ஆம் தேதியுடன் முடிவடைகிறது. காலியாக உள்ள கன்னியாகுமரி மக்களவை தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, விவிபேட் இயந்திரம் தொடர்பான கையேடு, வாக்காளர் விழிப்புணர்வு குறும்படத்தை தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டனர்.