பாவேந்தர் பாரதிதாசனின் 133வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்குத் தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், "புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் 133வது பிறந்தநாளில் அவரை வணங்குவதில் பெருமை கொள்கிறேன். புதுச்சேரியில் இன்று (29.04.2023) மாலை பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா உள்ளது. புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்து பாரதிதாசன் உடையது தான். புதுச்சேரியோடு பாரதிதாசனும், பாரதியாரும் ஒன்றிணைந்தவர்கள். அதனால் மரியாதை செலுத்துவதில் பெருமை கொள்கிறேன். நாளைய தினம் (30.04.2023) பிரதமரின் மனதின் குரல் 100வது நிகழ்வு ஒளிபரப்பப்படுகிறது. நாளை காலை தெலுங்கானாவிலும், மாலையில் அதன் தமிழ் மொழிபெயர்ப்பைப் புதுச்சேரியிலும் கொண்ட இருக்கிறோம். மனதின் குரல் நிகழ்ச்சி மிகப்பெரிய சமுதாய புரட்சியை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. இளைஞர்கள் அனைவரும் மனதின் குரலைக் கேட்க வேண்டும். இது அரசியல் கலவாத சமுதாய நிகழ்ச்சி.
அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களுக்கு வெள்ளிக்கிழமை இரண்டு மணி நேரச் சலுகை வரவேற்பு நன்றாகத் தான் இருக்கிறது. எதிர்க் கட்சிகளிடம் இருந்து வரவேற்பு இருக்காது என்று தெரியும். எதிர்க்கட்சி தலைவர் சிவா இதனைப் பெண் அடிமைத் தனம் என்று குறிக்கிறார். இது எப்படி என்று தெரியவில்லை என்னைப் பொறுத்தவரைப் பெண்கள் முன்னேறி வருகிறார்கள். கடுமையாக பணியாற்றும் பெண்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று இந்த சலுகை வழங்கப்பட்டு இருக்கிறது. பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது என்பதை மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறேன். கலைஞருக்குப் பேனா சிலை வைப்பதற்குச் சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்து இருக்கிறார்கள். பேணா சிலை வைப்பதன் மூலம் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது என்றால் இது அவருக்கே ஒத்துக்கொள்ளாது. சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தான் அனுமதி கொடுக்கப்பட்டது இருக்கிறது" என்றார்.
கர்நாடக மாநிலத்தில் பாஜகவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது தமிழ்த் தாய் வாழ்த்து நிறுத்தப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "அண்ணாமலை வருவார் அவரிடம் கேளுங்கள்" என்றார். டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு குறித்து கேள்விக்கு, "பெண்களுக்குப் பாதுகாப்பு குறித்து எல்லா அரசு உறுதி செய்துள்ளது. பெண்களின் பாதுகாப்பு நிச்சயமாகப் பாதுகாக்கப் பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை" என்றார்.