கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில், தமிழ் மருத்துவமான பாரம்பரிய மருத்துவ முறைகளைத் தேடித்தான் மருத்துவ உலகம் தனது கவனத்தை திருப்பியிருக்கிறது. இந்திய அரசும் தமிழ் மருத்துவத்தின் பலன்களைத்தான் தொற்று பரவலைத் தடுப்பதற்கும், குணமாக்குவதற்கும் பரிந்துரை செய்கிறது. மேலும், கரோனாவின் முதல் அலையின் போது தமிழகத்தின் பாரம்பரிய மருத்துவம்தான் 100 சதவீதம் நோயாளிகளை காப்பாற்றியுள்ளது. இந்தச் சூழலில், மே 2 க்கு பிறகு தமிழகத்தில் அமையவிருக்கும் புதிய அரசு, தனது அமைச்சரவையில் தமிழ் மருத்துவத்திற்கென தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும் என்று தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு கோரிக்கை வைத்திருக்கிறது.
இது குறித்து அப்பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம் தனது சமூக வலைதளப்பக்கத்தில், "தமிழ் மருத்துவத்தின் பயன்களை உலகம் முழுதும் கொண்டு செல்ல தமிழ் மருத்துவத் துறைக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும். தமிழகத்தில் மே 2 ஆம் தேதிக்கு பிறகு ஆட்சிக்கு வருபவர் யாராக இருந்தாலும், வருமுன் காப்போம் என்ற பொன்மொழிக்கேற்ப கொடும் நோய் தொற்றை தடுக்க தமிழ் பாரம்பரிய மருத்துவமுறைகளை மக்களிடம் முன்னெடுத்து செல்வது அவசியமானது. தமிழ்நாட்டில் இருந்து இதனை முன்னெடுக்கா விட்டால் யார் முன்னெடுப்பது? கடுந்தொற்று காலத்திலும் மாநகரங்கள் முதல் கிராமங்கள் வரை தமிழ் மருத்துவத்தின் மகத்துவத்தை சொல்லி, மக்களை அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றியது தமிழ் பாரம்பரிய மருத்துவமுறைகள் தான். அதனால், அதன் மகத்துவத்தையும், பெருமையையும் உலகம் முழுக்க கொண்டு செல்ல வேண்டிய தலையாய கடமை நமக்கு உள்ளது.
இதற்கு அரசு ஆவண செய்ய வேண்டும். சித்தர்களின் தமிழ் மருத்துவக் களஞ்சியங்களை ஓலைச்சுவடிகள் வழியாக வழங்கி அருந்தொண்டாற்றும் தமிழ் வளர்ச்சித் துறையோடு இணைந்து , தமிழ் மருத்துவத்துறைக்கு தனியாக அமைச்சகம் அமைக்கவும் அரசு ஆவண செய்ய வேண்டும் " என்று பதிவு செய்திருக்கிறார் காயத்ரி ரகுராம். அவரின் இந்த கோரிக்கை வைரலாகி வருவதுடன், தமிழக அரசியலிலும் ஆயுஸ் மருத்துவத்துறை வட்டாரங்களிலும் உற்று கவனிக்கவும் செய்துள்ளது.