உள்ளாட்சித் தேர்தலையொட்டி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உரிமத்துடன் துப்பாக்கி வைத்திருப்போரில் 3691 பேர் தங்கள் துப்பாக்கிகளை காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர். துப்பாக்கிகளை ஒப்படைக்காத 49 பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் வரும் 27ம் தேதியும், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் டிசம்பர் 30ம் தேதியும் நடக்கிறது. தேர்தல் நடத்தை விதிகளின்படி, தனி நபர்கள் உரிமம் பெற்று வைத்திருக்கும் கைத்துப்பாக்கிகள், நாட்டுத்துப்பாக்கிகளை அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும்.
தேர்தல் காலங்களில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு துப்பாக்கிகள் பெறப்படுகிறது. இத்துப்பாக்கிகள், தேர்தல் முடிந்த பிறகு உரிமதாரர்களிடம் திரும்பவும் வழங்கப்பட்டு விடும்.
சேலம் மாவட்டத்தை பொருத்தவரை புறநகர் பகுதிகளில் 1432 பேருக்கும், மாநகரில் 540 பேருக்கும் என மொத்தம் 1972 துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வழங்கப்பட்டு உள்ளது. இவர்கள் அனைவரும் துப்பாக்கிகளை உடனடியாக காவல்நிலையங்களில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி, இதுவரை மாவட்டம், மாநகரப் பகுதிகளைச் சேர்ந்த 1948 பேர் தங்களிடம் உள்ள துப்பாக்கிகளை காவல்நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர். இன்னும் 24 பேர் ஒப்படைக்கவில்லை.
அதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் துப்பாக்கி உரிமம் பெற்றுள்ள 1062 பேரில், இதுவரை 1055 பேர் தங்களிடம் உள்ள துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர். 7 பேர் துப்பாக்கிகளை ஒப்படைக்காமல் உள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில், துப்பாக்கி உரிமம் பெற்றுள்ள 484 பேரில், இதுவரை 478 பேர் துப்பாக்கிகளை கொண்டு வந்து கொடுத்துள்ள நிலையில், 6 பேர் சமர்ப்பிக்காமல் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்னும் 12 பேர் துப்பாக்கிகளை ஒப்படைக்காமல் இருக்கிறார்கள். அந்த மாவட்டத்தில் மொத்தம் 222 துப்பாக்கிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, சேலம் புறநகர், மாநகர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் சரகத்தில் இதுவரை 3691 துப்பாக்கிகள் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. துப்பாக்கிகளை ஒப்படைக்காத 49 பேருக்கு, உடனடியாக ஒப்படைக்கும்படியும், விளக்கம் கேட்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. காவல்துறை உத்தரவை பின்பற்றாத துப்பாக்கி உரிமதாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.