1971 ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை இந்தியா பெற்றது. அந்தப் போர் 1971 டிசம்பரில் பங்களாதேஷை உருவாக்க வழிவகுத்தது. அப்போர் வெற்றியின் 50 -வது ஆண்டு கொண்டாட்டத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அவர் புதுதில்லியில் உள்ள தேசியப் போர் நினைவுச்சின்னத்தில் “ஸ்வர்னிம் விஜய் மஷால்” வெற்றி தீப்பந்தத்தை ஏற்றி, 50 வது ஆண்டு விழாவைத் தொடங்கி வைத்தார். அது நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு, 2021 ஜூலை 18 அன்று மதுரையில் இருந்து கல்லிக்குடி சந்திப்பு அருகில் திருச்சியை வந்தடைந்தது.
அதனை தாங்கி வந்த குழுவினர் திருச்சியில் உள்ள குழுவினருடன் சேர்ந்து பல நிகழ்வுகளை நடத்திக்காட்டினர். திருச்சி நகரத்தின் பல்வேறு இடங்களுக்கு அந்த வெற்றித் தீப்பந்தம் கொண்டு செல்லப்பட்டு பிற்பகல் 1.30 மணிக்குத் தேசியக் கல்லூரியை வந்து அடைந்தது. தேசியக் கல்லூரி முதல்வரும் மேனாள் மாணவர் படைத் தலைவருமான இரா.சுந்தரராமன், என்.சி.சி, 4 (டி.என்) பெண்கள் அதிகாரி கர்னல் கோபிகுமார், தேசியக் கல்லூரி மாணவர் படை அதிகாரி லெப்டினன்ட். வி.வனிதா ஆகியோருடன் சேர்ந்து தீப்பந்தத்தினைப் பெற்றுக் கொண்டனர்.
கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த விஜய்மஷால் சுடருக்கு, தேசிய மாணவர் படையினர் மரியாதை செலுத்தினர். இதில் பல்வேறு கல்லூரிகளின் என்.சி.சி மாணவர்கள் மற்றும் தேசிய கல்லூரியின் மாணவர்கள், ஊழியர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இக்கொண்டாட்ட நிகழ்வு தேசிய கீதத்துடன், நிறைவுபெற்றது. இறுதியாக கர்னல் கோபிகுமார், 117 INf. Bn. (TA) காவலர்களிடம் வெற்றித் தீப்பந்தத்தினை ஒப்படைத்தார்.