Skip to main content

சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!

Published on 18/06/2022 | Edited on 18/06/2022

 

Sugarcane farmers wait in front of the sugar mill!

 

கடலூர் மாவட்டம்  விருத்தாசலம் அருகேயுள்ள எ.சித்தூரில் உள்ளது திரு ஆரூரான் சர்க்கரை ஆலை. இந்த ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக சுமார் 40 கோடி நிலுவை பாக்கி உள்ளது. அதேபோல் விவசாயிகள் பெயரில் வங்கியில் சுமார் 13 கோடிக்கு ஆலை நிர்வாகம் கடன் பெற்றுள்ளது. விவசாயிகளுக்கான நிலுவை பாக்கி தராமலும், கடன் தொகை வங்கிகளுக்கு செலுத்தாமலும் உள்ளது. இதனால் விவசாயிகள் வங்கிகளில் பெறும் வேறு வகையிலான கடன்கள் மற்றும் வருவாயை வங்கிகள் விவசாயிகளிடமிருந்து அபகரித்துக் கொள்கிறது. இதனால் நிலுவைத் தொகையை உடனே வழங்க கோரியும், வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரியும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் கரும்பு விவசாயிகளின் சங்கம் சார்பில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அனைத்து விவசாயிகள் சங்க செயலாளர் வழக்கறிஞர் தங்க.தனவேல் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக  சித்தூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டவாறு  பேரணியாக விவசாயிகள் சர்க்கரை ஆலைக்கு வந்தனர்.

 

விவசாயிகளுக்கு முழு தொகையையும் ஒரே தவணையில் கொடுக்க வேண்டும், விவசாயிகள் பெயரில் வங்கியில் வாங்கிய கடனை முழுவதுமாக ஆலை நிர்வாகம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், எதிர்காலத்தில் மீண்டும் இதே நிலைமை நடைபெறாமல் இருக்க, தமிழக முதல்வர் தலையிட்டு, ஆரூரான்  சர்க்கரை ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும்,  திரு ஆரூரான் சர்க்கரை ஆலை, ஸ்ரீ அம்பிகா சர்க்கரை ஆலைக்கு அனுப்பிய விவசாயிகளின் கரும்பு பணத்தை உடனடியாக பெற்று தரவேண்டும் என வலியுறுத்தி, எந்த வகையிலும் நிலுவைத் தொகை இல்லாத சூழலில் இருந்தால் மட்டுமே ஆலையை இயக்க அனுமதிப்போம் என காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Sugarcane farmers wait in front of the sugar mill!

 

காத்திருப்பு போராட்டத்தில் தமிழக உழவர் முன்னணி தலைவர் முருகன்குடி முருகன், பா.ஜ.க விவசாய அணி மாவட்ட தலைவர் செந்தில்குமார், தமிழ்த்தேசிய பேரியக்க தலைமைச் செயற்குழு உறுப்பினர் மா.மணிமாறன், நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட செயலாளர் கதிர்காமன், தமிழ்நாடு அனைத்து விவசாய சங்க மாவட்ட தலைவர் கோகுலகிருஷ்ணன், ஜனநாயக விவசாய சங்கம் ராமர், கந்தசாமி அவர்களும் இந்திய ஜனநாயக கட்சி விவசாய அணி தலைவர் மேமாத்தூர் அண்ணாதுரை, தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் ராஜா, மணிமுத்தாறு பாதுகாப்பு குழு பாலு, ராஜேந்திரன், நாகராஜன், கச்சிமயிலூர் ஸ்டாலின், ஒன்றிய கவுன்சிலர்கள் சரவணன், செந்தில்குமார் பாக்கியராஜ், பெண்ணாடம் விவசாய சங்க தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் முன்னோடி விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 

பின்னர் வேப்பூர் வட்டாட்சியர் மோகன் மற்றும் டி.எஸ்.பி ஆரோக்கியராஜ் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விவசாயிகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்ததுடன் சர்க்கரை ஆலையில் மாற்று பணிகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் ஆலையை மூடி சீல் வைத்தார், அதையடுத்து விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.