Skip to main content

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்!

Published on 16/09/2024 | Edited on 16/09/2024
A sudden turn in the case of confiscation of Rs. 4 crore

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இத்தகைய சூழலில் இது குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக பாஜக நிர்வாகிகளான நயினார் நாகேந்திரன், எஸ்.ஆர். சேகர் என 15க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர்.

A sudden turn in the case of confiscation of Rs. 4 crore

அதே சமயம் தாம்பரம் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட பணம் தன்னுடையது என ரயில் நிலையங்களில் உணவகம் நடத்தி வரும் முஸ்தபா என்பவர் வருமான வரித்துறையிடம் உரிமை கோரினார். இதனையடுத்து முஸ்தபாவை நேரில் ஆஜராகும்படி சிபிசிஐடி போலீஸாா் சம்மன் அனுப்பினர். அதன்பேரில் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் கடந்த 30ஆம் தேதி ஆஜராகிய முஸ்தாபாவிடம் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட பணம் முஸ்தபாவின் பணம் இல்லை எனத் தகவல் வெளியாகி இருக்கிறது. முஸ்தபாவின் வங்கிக் கணக்குகளை சிபிசிஐடி போலீசார் ஆராய்ந்த போது இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் முஸ்தபாவிடம், பணத்திற்கு உரிமை கோருமாறு அறிவுறுத்திய நபர் யார் என்பது குறித்தும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்