தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜய் கடந்த 27ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் மிகப்பெரிய மாநாட்டை நடத்திக் காட்டினார். மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்பட்டதோடு விஜய் தன்னுடைய கொள்கை மற்றும் அரசியல் எதிரிகள் யார் என்பது குறித்துப் பேசி இருந்தார். மேலும் திராவிடமும் தமிழ் தேசியமும் இரு கண்கள் என விஜய் பேசியிருந்தார்.
இதை நாம் தமிழர் கட்சியின் சீமான் கடுமையாக விமர்சனம் செய்து பேசியது பேசு பொருளானது. இது நாம் தமிழர் தொண்டர்களுக்கும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக தொண்டர்களுக்கு இடையே மோதல் போக்கை உருவாகியிருந்தது. இந்நிலையில் பல்வேறு கட்சியினரும் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சீமானின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்குப் பதிலளித்து பேசிய அவர், ''அவர் திடீரென அந்நியனாக மாறுவார். திடீரென அம்பியா மாறுவார். இதற்கெல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. எதற்கு தம்பி என்று சொன்னாரு பின்னாடி எதற்கு லாரியில அடிபட்டு சாவுவ என்று சொன்னாரு தெரில. இதற்கெல்லாம் சீமான் பதில் சொல்ல வேண்டும். எப்போதும் ஒரே நிலைப்பாட்டோடு இருக்க வேண்டும். எல்லோருக்கும் பேசுவதற்கு சக்தியை கடவுள் கொடுத்திருக்கிறார். அதற்காக வாய்க்கு வந்ததெல்லாம் பேசக்கூடாது என்ற கருத்தை மட்டும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்'' என்றார்.
Published on 04/11/2024 | Edited on 04/11/2024