
சிதம்பரம் அருகே லால்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியிலுள்ள நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென சாலை உள்வாங்கியது. உள்வாங்கிய இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டு அதில் கழிவுநீர் பொங்கி எழுந்தது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் பதற்றத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் ஓடினார்கள். பின்னர் அந்த வழியாக செல்லும் போக்குவரத்தை தடை செய்தனர். பின்னர் இது குறித்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.
இது குறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகையில் லால்புரம் பகுதியில் இந்த சாலை அதிமுக ஆட்சியில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் ஒரு வழி மார்க்கமாக இருந்த சாலையை இரு வழி மார்க்கமாக மாற்றும் பணியில் போடப்பட்டது. இந்த சாலையின் கீழே சிதம்பரம் நகராட்சியில் சேகரிக்கப்படும் கழிவுநீர் குழாய் இதன் வழியாக செல்கிறது. பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு இதுபோன்று நிகழ்ந்திருக்கும் என அப்பகுதியில் உள்ளவர்கள் கூறுகின்றனர். அதேநேரத்தில் சாலை தரமில்லாமல் போட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். இது குறித்து சம்பந்தபட்ட நெடுஞ்சாலைதுறையினர் ஆய்வு நடத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே சம்பந்தப்பட்ட நகராட்சி ஊழியர்கள் இரவோடு இரவாக சாலையை தற்காலிகமாக சரி செய்துள்ளனர். ஆனால் போக்குவரத்திற்கு தடை அளிக்கப்பட்டுள்ளது. அந்தபகுதியில் சாலை உள்வாங்கியதால் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.