ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் பிப்ரவரி 9 ஆம் தேதி(இன்று) உலகமெங்கும் வெளியாகியுள்ளது. ஒரே கிராமத்தை சேர்ந்த இந்து - இஸ்லாமிய சமூக இளைஞர்களுக்கு இடையே கிரிக்கெட் விளையாடும்போது சண்டை உருவாகி மதமோதலாக உருவாகும் சூழ்நிலை. இதனைச் சரிசெய்ய வருகிறார் ரஜினிகாந்த். சரி செய்தாரா இல்லையா என்பதே கதை.
இப்படத்தின் கதை திருவண்ணாமலை அருகே ஒரு கிராமத்தை மையப்படுத்தி எழுதப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த ஆவூர் கிராமம் உட்பட திருவண்ணாமலை நகரத்தில் நடைபெற்றது. படத்தை வரவேற்கும் விதமாகவும், படம் வெற்றி அடையவும் வேலூரில் உள்ள அலங்கார் திரையரங்கத்தில் வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த ரஜினிகாந்த் நற்பணி மன்ற மாவட்ட செயலாளர் சோளிங்கர் ரவி தலைமையில் இந்து கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் அனைவரும் இஸ்லாமிய தொப்பி அணிந்து தொழுகை நடத்தினர்.
பட்டாசுகள் வெடித்து, மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை மேளதாளத்துடன் நடத்தி ரசிகர்கள் நடனமாடி மகிழ்ந்தனர். மேலும், நிகழ்ச்சியின் இறுதியாக தேங்காய், எலுமிச்சை மற்றும் பூசணி உள்ளிட்டவைகளில் கற்பூரம் ஏற்றி திருஷ்டி கழித்தனர்.