கர்நாடகா அரசை கண்டித்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி கர்நாடக அரசு, தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரை திறந்து விட வலியுறுத்தியும், உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு பின் திறக்கப்படும் குறைந்த நீரைக்கூட தடுக்கும் கர்நாடக பாஜக மற்றும் அமைப்புகளைக் கண்டித்தும், தமிழக அரசு, பலமுறை ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியும் தமிழக விவசாயிகளை பற்றிக் கவலைப்படாத ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் இன்று டெல்டா மாவட்டம் முழுவதும் காவேரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கம் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருச்சி பிஎஸ்என்எல் அலுவலக நுழைவாயில் முன்பு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இணைந்து சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமை தாங்கினார். மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான அன்பழகன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சிவா, மதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.