Skip to main content

​ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதியில்லை! -வேதாந்தா நிறுவனத்தின் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி!

Published on 18/08/2020 | Edited on 18/08/2020

 

chennai high court

 

ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு அனுமதியளிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, வேதாந்த குழுமத்தின் சார்பில் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை நோய்ப் பரப்புவதாகக் கூறி, அந்த ஆலையை உடனே மூட வேண்டும் என்று கடந்த 2018 மே மாதம் 22 -ஆம் தேதி, பொது மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள். அப்போது போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இதில் 13 அப்பாவி பொது மக்கள்  பலியானார்கள்.


ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால், அந்த ஆலையை உடனே மூடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி  2018 -ஆம் ஆண்டு மே மாதம் 28 -ஆம் தேதி, ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு சீல் வைத்தது. மேலும், ஆலைக்கு வழங்கிய குடிநீர் இணைப்பு மற்றும் மின் இணைப்பைத் துண்டித்தது.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம், டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.  இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தருண்அகர்வால் தலைமையில் குழு ஒன்றை நியமித்து உத்தரவிட்டது.


தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவின்படி, ஸ்டெர்லைட் ஆலையில் தருண் அகர்வால் குழு நேரடி ஆய்வு செய்தது. அதன் அறிக்கையை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம், கடந்த 2018 டிசம்பர் மாதம் 15 -ஆம் தேதி, தீர்ப்பு ஒன்றை வெளியிட்டது.


அதில், ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று தெரியவந்துள்ளது. ஆலை நிர்வாகத்தால் வெளியேற்றப்படும் கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிப்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும். 15 நாட்களுக்குள் ஸ்டெர்லைட் ஆலையைத்  திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.


இதையடுத்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்தது. ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு அனுமதிக்கும் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு தனது மனுவில் கூறி இருந்தது.


இதற்கிடையே,  வேதாந்தா நிறுவனமும் உச்ச நீதிமன்றத்தில் தனியாக ஒரு மனுத் தாக்கல் செய்தது. ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க வேண்டும் எனவும், தமிழக அரசின் உத்தரவை ஏற்கக் கூடாது என்றும், அந்த நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.


ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே நிலுவையில் இருந்த வழக்குகளும் இந்த மேல்முறையீட்டு வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்பட்டது.


இந்த வழக்கில் 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7 –ஆம் தேதி,  இந்த வழக்கில் வழக்கறிஞர்களின் வாதம் அனைத்தும் முடிவடைந்தது. உச்சநீதிமன்றத் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. 


இந்த நிலையில் ஸ்டெர்லைட் வழக்கில்  2019- ஆம் ஆண்டு பிப்ரவரி 18- ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பாலிநாரிமன், நவீன்சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு  தீர்ப்பளித்தது. அதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க இயலாது. அந்த ஆலையைத் திறக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் தமிழக அரசு அடுத்தடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ள உரிமை உள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடும் அதிகாரம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்குக் கிடையாது. எனவே தீர்ப்பாயம் வெளியிட்ட உத்தரவுக்குத் தடை விதிக்கப்படுகிறது.


தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் அனுமதி பெற்றதை ஏற்க இயலாது. இந்த விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகிறது. தேவைப்பட்டால், வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.


இதனையடுத்து, கடந்த ஆண்டு (2019) பிப்ரவரி மாதம், ஸ்டெர்லைட் நிறுவனமான வேதாந்தா நிறுவனத்தின் சட்டப் பிரிவு பொது மேலாளர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலையை மூடி முத்திரையிட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின்  உத்தரவு என்பது தவறானது. ஆலையால் மாசு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பாக எந்தவிதமான ஆதாரபூர்வமான தகவல்களும் அரசிடம் இல்லை. தங்கள் நிறுவனத்திற்கு எதிராக அரசுத் தரப்பில் கூறும் குற்றச்சாட்டுக்கள் என்பது முற்றிலும் தவறானது எந்த விதமான ஆதாரங்களும் இல்லை. அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றியே ஸ்டெர்லைட் நிறுவனம் செயல்பட்டது. ஆலைக்கு அனுமதி அளித்தபோது விதிக்கப்பட்ட விதிமுறைகளை ஆலை நிர்வாகம் கடைப்பிடித்து வந்தது.  எனவே, ஆலையை மூடி சீல் வைத்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவு சட்ட விரோதமானது. அதனை ரத்து செய்ய வேண்டும். ஆலைக்கு மீண்டும் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புகளை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த வழக்கு,  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம் மற்றும் பவானி சுப்புராயன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டது.


இந்த வழக்கில், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அபாயகரமான அளவில் விஷவாயுவை வெளியேற்றக்கூடிய ஒரே ஆலை ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே. ஆலை மாசு காரணமாக அப்பகுதி மக்களுக்குப் பல்வேறு நோய்கள் வந்துள்ளன. மாசு காரணமாக அப்பகுதியில் நிலத்தடி நீர், உயிரினங்கள் உட்கொள்ள உகந்ததற்றதாக ஆகிவிட்டது. ஆலை மூடியபின்னர், நிலத்தடி நீரின் தரம் மேம்பட்டு, காற்று மாசு குறைந்துள்ளது.

 

ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பின்னர்,  தூத்துக்குடியில் மாசு குறைந்துள்ளது. 1994-ஆம் ஆண்டு, வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலை அனுமதிக்கக் கோரிய போது, கொள்கை அடிப்படையில் சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. சுற்றுச்சூழல், காற்று, தண்ணீர் மாசு அடையும் வகையில் ஆலைக்குள் கழிவுகளைத் தேக்கி வைத்ததால்,  2013-ஆம் ஆண்டு, விஷ வாயுக் கசிவு ஏற்பட்டது. ஸ்டெர்லைட் ஏற்படுத்திய மாசுவை அரசோ, நீதிமன்றமோ கண்மூடி வேடிக்கை பார்க்கக் கூடாது. எனவே, நிரந்தரமாக ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.


இதனிடையே பராமரிப்பு பணிகளுக்கு ஆலையைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை  நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

 

http://onelink.to/nknapp


இதனையடுத்து, 39 நாட்களாக உயர்நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற்றது. தமிழக அரசு, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், வேதாந்தா நிறுவனம், மற்றும் வைகோ உள்ளிட்ட இடைமனுதார்கள், தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தனர்.


அனைத்துத் தரப்பு வாதங்களும் கடந்த ஜனவரி மாதம் 8-ஆம் தேதி நிறைவடைந்ததை அடுத்து, அன்று வழக்கின் தீர்ப்பினை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.


இந்நிலையில் இந்த வழக்கில்,  தீர்ப்பளித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன், ஆலையைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் மனுவைத் தள்ளுபடி செய்வதாகவும், மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு ஆகியவற்றை மீண்டும் வழங்க வேண்டும் என்ற ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மனுவை ஏற்க முடியாது எனவும் தெரிவித்து, அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 


 
 

சார்ந்த செய்திகள்