தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதேபோல் மார்ச் 14 ஆம் தேதி பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. 3,225 மையங்களில் இந்த பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் தேர்வை பள்ளி மாணவர்கள் 49,559 பேரும், தனித்தேர்வர்கள் 1,115 பேரும் எழுத வரவில்லை எனப் பள்ளிக்கல்வித்துறை கூறியிருந்த நிலையில் தேர்வு எழுதாதவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு உரிய ஆலோசனை மற்றும் அறிவுரை வழங்கப்பட்டு துணைத் தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி தொடங்கிய 10ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 25 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளன. இதனால் கடந்த 28 ஆம் தேதி உடன் முடிய வேண்டிய செய்முறைத் தேர்வானது நாளை (31.03.2023) வரை நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் செய்முறைத் தேர்வில் கலந்துகொள்ளாத மாணவர்கள் நீட்டிக்கப்பட்ட நாளில் நடக்கும் தேர்வில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.