திண்டுக்கல் மாவட்ட அதிமுக மகளிர் அணி செயலாளராக இருக்கும் வளர்மதி ஆரம்ப காலத்திலிருந்து கட்சியில் இருந்து கொண்டு மகளிர் அணியையும் வளர்த்து வருகிறார். அதுபோல் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் தீவிர ஆதரவாளராக இருக்கும் வளர்மதி, அமைச்சர் சீனிவாசனை மாமா என்றுதான் கூப்பிடுவார். அந்த அளவுக்கு அமைச்சர் சீனி மேல் விசுவாசமாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில்தான் திண்டுக்கல்லில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் ஏ.பி.ஆர்.ஓ.வாக பணிபுரிந்து வந்த வளர்மதியின் மகன் அருண்குமார் கஞ்சா பிசினஸ் செய்து வந்ததாக கூறி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதைக் கண்டு மகளிர் அணிச் செயலாளர் வளர்மதி மனம் நொந்து போய் விட்டார். அதன் பின் தன் மகனை காப்பாற்றுவதற்காக இபிஎஸ், ஓபிஎஸ் வரைக்கும் போயும் கூட காப்பாற்ற முடியவில்லை. அதை மனதில் வைத்து கொண்டு லோக்கலில் இருக்கும் பொறுப்பில் உள்ள
ர.ர.க்கள் வளர்மதியை மதிக்காமல் புறக்கணித்து வந்தனர்.
இந்த நிலையில்தான் ஆளுங்கட்சி சார்பில் நிலக்கோட்டையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு வந்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை பார்த்த வளர்மதியோ தன்னை வத்தலகுண்டில் உள்ள நகர செயலாளர் பீர்முகமது உள்பட பொறுப்பில் உள்ள கட்சிகாரர்கள் சிலர் என்னை மதிப்பதே இல்லை மாமா. நீங்கள் ஒதுக்கி கொடுக்க சொன்ன சலுகைகளையும் கூட கொடுப்பதில்லை. அதுபோல் நேற்று கட்சிக்கு வந்த சின்னப் பையங்க கூட என்னை மதிப்பதில்லை மாமா. இந்த கட்சியை வளர்க்க நானும் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பேனு உங்களுக்கே தெரியுமில்ல. மாமா தற்பொழுது என் அரசியல் வளர்ச்சியை பொருக்க முடியாமல் தான் என் மகன் மேல் பொய் வழக்கு போட்டு சிக்க வைத்து விட்டனர் என்று கூறி கதறி அழுது இருக்கிறார். அதை கேட்ட வனத்துறை அமைச்சர் சீனிவாசனும் சரி விடும்மா நான் பேசிக் கொள்கிறேன். இதுக்கு போய் கண் கலங்கற என்றவாரே, வளர்மதிக்கு ஆறுதல் கூறி இருக்கிறார். இப்படி வத்தலக்குண்டு பகுதியில் உள்ள பொறுப்பில் இருக்கும் சில ர.ர.க்களை பற்றி அமைச்சர் சீனிவாசனிடம் மகளிர் அணி செயலாளர் வளர்மதி முறையிட்டு இருப்பதை கண்டு மாவட்டத்தில் ர.ர.க்கள் மத்தியிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.