Skip to main content

பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
Special buses run for the convenience of passengers

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காகச் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “05/07/2024 (வெள்ளிக்கிழமை - அமாவாசை), 06/07/2024 (சனிக்கிழமை) மற்றும் 07/07/2024 (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாகச் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி. தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று 415 பேருந்துகளும், சனிக்கிழமை 310 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

Special buses run for the convenience of passengers

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை. நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 55 பேருந்துகளும், சனிக்கிழமை 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதோடு வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு வெள்ளிக்கிழமை அன்று 15 பேருந்துகளும், சனிக்கிழமை அன்று 15 பேருந்துகளும் ஆக 30 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாகப் பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 7 ஆயிரத்து 350 பயணிகளும் சனிக்கிழமை 3 ஆயிரத்து 264 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 7 ஆயிரத்து 290 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே தொலைதூர பயணம் மேற்கொள் இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் செயலி (Mobile App) மூலம் முன்பதிவு செய்து பயணிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்