அரியலூர் மாவட்டம் தாபழூர் அருகே உள்ளது சுத்தமல்லி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் 36 வயது சுரேஷ். இவர் நேற்று முன்தினம் (14.04.2021) டாஸ்மாக் கடையில் 150 மில்லி அளவுள்ள குவார்ட்டர் மது பாட்டில் வாங்கி சென்றுள்ளார். தனது வீட்டுக்கு எடுத்துச் சென்றவர், செல்லும் வழியிலேயே பாதி அளவு மதுவை குடித்துவிட்டு மீதி மதுவை வீட்டுக்குச் சென்று குடிப்பது என வைத்துள்ளார். வீட்டுக்குச் சென்றவர் வீட்டிலிருந்த டம்ளர் ஒன்றை எடுத்து மது குடிப்பதற்காக பாட்டிலிலிருந்து டம்ளரில் மதுவை ஊற்றும்போது, அந்தப் பாட்டிலுக்குள் கட்டுவிரியன் பாம்பு குட்டி ஒன்று இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுரேஷ், குடும்பத்தினரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.
அப்போது அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே அவரது குடும்பத்தினர் அவரை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்து, அன்றிரவே வீட்டிற்கும் அழைத்து வந்துள்ளனர். சுரேஷ் தற்போது நலமாக உள்ளார். இந்த தகவல் மாவட்டம் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஜெயங்கொண்டம் டிஎஸ்பி தேவராஜன், போலீஸ் மூலம் விசாரணை செய்துள்ளார். அவர் பத்திரிகை மீடியாக்களிடம் கூறும்போது “சுரேஷ் தொடர்ந்து மதுகுடித்து வந்துள்ளார். அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் குடி பழக்கத்தை நிறுத்துமாறு குடும்பத்தினர் வலியுறுத்தி வந்துள்ளனர்.
சுரேஷ் அவர்கள் பேச்சைக் கேட்கவில்லை. அவரது குடிப்பழக்கத்தை நிறுத்துவதற்காகவும் அவரைப் பயமுறுத்துவதற்காகவும் அவர் கொண்டுவந்த பாதி மது இருந்த பாட்டிலில், சுரேஷின் மகள் தனம் என்பவர் பாம்பு குட்டியை அதற்குள் போட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் உண்மைத்தன்மையை அறிய பாம்பு குட்டியிருந்த மது பாட்டில் டாஸ்மாக் அதிகாரிகள் மூலம் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வுக்குப் பிறகே உண்மைத்தன்மை தெரியவரும்" என்று கூறியுள்ளார். இதுகுறித்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் செல்வராஜ், “சுரேஷ் வைத்திருந்த மீதி பாட்டிலை அவரது குடும்பத்தினரிடம் இருந்து பெறப்பட்டு அதை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பாம்பு குட்டி பாட்டிலில் கிடந்ததா? யாராவது அதில் உள்ளே போட்டார்களா? என்பது விரைவில் தெரியவரும்” என்கிறார்.
இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள், “150 மில்லி அளவு கொண்ட சிறிய பாட்டில் அதற்குள் பாம்பு குட்டி நுழைவதற்கு வாய்ப்பு மிக மிகக் குறைவு. அது தயாரிக்கும்போது தவறுதலாக பாம்பு குட்டி அதனுள்ளே நுழைந்திருந்தது உண்மையே என்றாலும் கூட, அந்தப் பாட்டிலை வாங்கிய சுரேஷ் அதைப் பார்த்திருக்க வேண்டும். மேலும் அதை முதலில் பாதி திறந்து குடிக்கும்போதாவது அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பது நிச்சயம் அவரது கண்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. எனவே, இது திட்டமிட்டு சுரேஷ் அல்லது அவரது குடும்பத்தினர் யாராவது செய்திருக்கும் செயல் என்றே தோன்றுகிறது. இருந்தபோதிலும் டாஸ்மாக் அதிகாரிகள் மீதியிருந்த மதுவை அந்தப் பாட்டிலுடன் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். ஆய்வு முடிவுகள் வந்த பிறகு இது விளையாட்டா அல்லது விபரீதமா, என்ன நடந்தது என்பது தெரிந்துவிடும்” என்கிறார்கள்.