![Shivajis-birthday](http://image.nakkheeran.in/cdn/farfuture/ulwvidw1BHVyxZ_XG80SNqmMFzR-r4m0gmRgfHDL1eM/1533347634/sites/default/files/inline-images/Shivajis-birthday.jpg)
சுதந்திரபோராட்ட வீரர் ராமசாமி படையாச்சி, நடிகர் சிவாஜி கணேசன் ஆகியோரது பிறந்த நாட்கள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
நடிகா் சிவாஜி கணேசனுக்கு அரசு சார்பில் மணி மண்டபம் கட்டப்பட்டு கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. மணி மண்டபத்தை திறந்து வைத்த துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வத்திடம் தென்னிந்திய நடிகா் சங்கம் மற்றும் சிவாஜி கணேசனின் குடும்ப உறுப்பினா்கள் சார்பில் சிவாஜி கணேசனின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் சிவாஜி கணேசன் பெற்ற விருதுகளைப் பட்டியலிட்டார். கலைமாமணி, பத்மபூஷன், செவாலியே, தாதாசாகேப் பால்கே ஆகிய விருதுகளைப் பெற்று, நடிகர் திலகம் என மக்களால் போற்றப்பட்ட மறைந்த சிவாஜி கணேசன், கலைத்துறைக்கு ஆற்றிய சேவைகளை போற்றிடும் வகையில், அவரது பிறந்த தினமான அக்டோபர் 1ஆம் தேதி, ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.
அதேபோல் சுதந்திரபோராட்ட வீரர் ராமசாமி படையாச்சியின் பிறந்தநாளையும் அரசு விழாவாக கொண்டாட இருப்பதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் அண்ணா நினைவிடம் புதுப்பிக்கப்படும் என்ற அறிவிப்பையும் முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.