வேலூர் மாவட்டம் ரவுடிகளின் ராஜ்யபூமியாக மாறிவருகிறது. அடிக்கடி ரவுடிகளுக்குள் மோதல் ஏற்படுவதும், அதில் யாராவது ஒருவர் கொலை செய்யப்படுவதும், அதற்கு பழிவாங்க மீண்டும் கொலை செய்வது என்பது வாடிக்கையாகிவிட்டது. இந்த பிரச்சனையில் போலிஸ் தீவிரமாக களம்மிறங்காமல் பிரச்சனை நடக்கும்போது மட்டும் குற்றவாளிகளை கைது செய்துவிட்டு பின்னர் அமைதியாகிவிடுகிறது. இதனால் காவல்துறை மீது, சட்டத்தின் மீது பயம்மில்லாத ரவுடிகள் கொலை, கடத்தல், கட்டப்பஞ்சாயத்துகளில் சர்வசாதாரணமாக ஈடுப்பட்டுவருகின்றனர்.
அப்படி கொலை, திருட்டு, ஆள்கடத்தலில் ஈடுப்பட்ட ஒரு இளம் ரவுடி கொலை செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளான் வேலூரில்.
வேலூர் மாநகரம் சைதாப்பேட்டையை சேர்ந்தவன் ரவுடி தமிழரசன். 25 வயதான இவன் மீது காவல்துறையில் 10க்கும் மேற்பட்ட புகார்கள் உள்ளது. இவனை யாரோ சிலர் கூட்டு சேர்ந்து பிப்ரவரி 12ந்தேதி இரவு படுகொலை செய்துள்ளனர். அவனது உடல் வேலூர் ரத்தினகிரி அருகே சென்னை – பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் நந்தியாலம் பாலத்தின் அருகே கழுத்து அறுப்பட்ட நிலையில் கிடந்தது. இந்த தகவல் பிப்ரவரி 13ந்தேதி காலை 10 மணிக்கு ரத்தினகிரி போலிஸாருக்கு தெரியவந்து மோப்ப நாய் உதவியுடன் அங்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட ரவுடி தமிழரசனின் தாய்மாமனான ரவுடி பிச்சைபெருமாள் என்பவனை சில மாதங்களுக்கு முன்பு, சத்துவாச்சாரி – காங்கேயநல்லூர் இடையே உள்ள ஏரியில் முகத்தை கல்லால் தாக்கி படுகொலை செய்து வீசியிருந்தனர். அந்த வழக்கில் குற்றவாளிகள் இன்னும் பிடிபடாமல் உள்ளனர்.
பிச்சைபெருமாளை கொலை செய்தது போட்டி ரவுடியான சத்துவாச்சாரி வீச்சுதினேஷ் தான். அவனை நான் கொல்லாமல் விடமாட்டேன் என சபதம் செய்துள்ளான் தமிழரசன். அதனை அறிந்த தினேஷ் கும்பல் தான் இவனையும் கொலை செய்துயிருக்க வேண்டும் என்கிறார்கள் போலிஸ் தரப்பில் ரவுடிகளை கண்காணிக்கும் சிறப்பு பிரிவினர்.
சினிமாவை பார்த்துவிட்டு கத்தியை எடுத்தால் நம்மை கண்டு நடுங்குவார்கள் என 15 வயது, 20 வயதிலேயே கத்தியை தூக்கினால் இறுதியில் இதுதான் முடிவாக இருக்கும்.