
ஹஜ் பயணிகளுக்கு 6 கோடி மானியம் அறிவித்துள்ள தமிழக அரசுக்கு மனித நேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளரும், நாகை எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி நன்றி தெரிவித்துள்ளார்.
ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இது நாடு முழுக்க பரப்பரப்பாக விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசு தமிழ்நாட்டிலிருந்து மெக்காவிற்கு செல்லும் ஹஜ் பயணிகள் 3828 பேருக்கு 6 கோடி ரூபாயை மானியமாக வழங்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 03.07.2018 செவ்வாய்க்கிழமை சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.
இதற்கு நன்றி தெரிவித்து சட்டப்பேரவையில் தமிமுன் அன்சாரி பேசுகையில், முதல் அமைச்சர் இன்று 110 விதியின் கீழ் அறிவித்த எண்ணற்ற திட்டங்களை வரவேற்கிறேன். அதில் ஒன்றாக, தமிழக ஹஜ் பயணிகளுக்கு 6 கோடி மானியம் அறிவித்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.
மத்திய அரசு ஹஜ்ஜுக்கு மானியத்தை ரத்து செய்துள்ள நிலையில், காஷ்மீர் போன்ற மாநிலங்களில் கூட இப்படி அறிவிக்கவில்லை. தமிழகம் திராவிட இயக்க பூமி என்பதும், சவலைப் பிள்ளைகளான சிறுபான்மை மக்களுக்கு ஆதரவான பூமி என்பதும், அம்மா அவர்களின் அரசு சிறுபான்மை மக்களின் நலன் காக்கும் அரசு என்பதும் நிருப்பிக்கப்பட்டிருக்கிறது என குறிப்பிட்டார்.