Skip to main content

மாணவருக்கு நள்ளிரவில் நடந்த ’ராகிங்’ கொடுமை; எஃப்.ஐ.ஆரில் வெளியான அதிர்ச்சி தகவல்

Published on 10/11/2023 | Edited on 10/11/2023

 

Shocking information in F.I.R about The 'ragging' of the student at covai

 

கோவையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவர் ஒருவரை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்ததாகக் கூறப்பட்டது. மது குடிக்க பணம் தராததால் இரண்டாம் ஆண்டு மாணவனை சீனியர் மாணவர்கள் ஏழு பேர் மொட்டை அடித்து ராகிங் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் இதுகுறித்து கோவை பீளமேடு காவல்துறையில் புகார் கொடுத்திருந்தனர். அதன் பேரில் விசாரணையில் ஈடுபட்ட போலீசார், கல்லூரியில் பயின்று வந்த சீனியர் மாணவர்கள் ஏழு பேரைக் கைது செய்திருந்தனர். 

 

இந்த நிலையில், இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, ‘பாதிக்கப்பட்ட மாணவர் அந்த கல்லூரி விடுதியில் சி பிளாக் முதல் மாடியில் தங்கியுள்ளார். இதனிடையே, கடந்த 6 ஆம் தேதி தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்த மாணவரின் அறைக் கதவை சிலர் தட்டியுள்ளனர். இதனையடுத்து, தூங்கிக் கொண்டிருந்த அந்த மாணவர் எழுந்து கதவைத் திறந்து பார்த்தார். அப்போது, சீனியர் மாணவர்களான சந்தோஷ், ஐயப்பன், யாழிஸ், மணிகண்டன், நித்யானந்தன், தில்பர், வெங்கடேஷ், தரணிதரன் ஆகியோர் வெளியே நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த மாணவர்கள், இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவரிடம் பணம் கேட்டுத் தொந்தரவு செய்துள்ளனர். 

 

இதையடுத்து, அவரின் சட்டையைப் பிடித்து இழுத்து 4வது மாடியில் உள்ள அறைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அறையில் வைத்து அந்த மாணவரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அதன் பின்னர், வெங்கடேஷ், சந்தோஷ் ஆகியோர் சேவிங் செய்யும் டிரிம்மர் ஒன்றை எடுத்து அந்த மாணவருக்கு மொட்டை அடித்துள்ளனர். மேலும், அந்த மாணவரை முட்டி போட வைத்து கீழே விழுந்த முடியை சுத்தம் செய்து குப்பைத் தொட்டியில் போட வைத்துள்ளனர். இதனையடுத்து, இங்கு நடந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டி அந்த மாணவரை வெளியே அனுப்பியுள்ளனர். இதனால், வேதனையடைந்த அந்த மாணவர் அழுது கொண்டே தனது அறைக்கு வந்துள்ளார். 

 

அதன் பின்னர், அந்த மாணவர் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் விரைந்து வந்து பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில், அந்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, ‘ராகிங்’ செய்த வழக்கில் கைதான 7 மாணவர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வெங்கடேஷ் என்ற மாணவர் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீஸார் வலைவீசித் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்