இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் பாலியல் ரீதியான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாஜக ஆட்சி புரியும் இடங்களில் சிறுமிகள் முதற்கொண்டு இளம்பெண்கள் வரை பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதில் கோரமுகமாக, கொடுஞ்செயலாக காஷ்மீரில் தத்துவா மாவட்டத்தில் சிறுமி ஆஷிபா மனித மிருகங்களால் பாலியல் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக உத்திரப்பிரதேசத்தில் இளம்பெண்ணை உள்ளுர் பாஜகவினர் பாலியல் தொந்தரவு செய்ததும் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களில் இளம்பெண்கள் மீதான பாலியல் சித்ரவதை நீண்டு கொண்டே போகிறது. இதை கண்டிக்கும் வகையில்தான் கேரளாவில் 10 வயதிற்குட்ட குழந்தைகள் உள்ள வீடுகளுக்கு பாஜகவினர் ஓட்டு கேட்டு வரவேண்டாம் என பொதுமக்களே தட்டி எழுதி வைத்துள்ளனர். இந்த குற்றச்செயல்களின் ஒரு அங்கமாக தமிழக பாஜக பிரமுகர் ஒருவரே சிறுமியிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
சென்னையில் வசிப்பவர் அபிலாஷ். இவர் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான கேரளாவுக்கு சென்றுவிட்டு கடந்த 21ஆம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்துள்ளார். இவர்கள் பயணம் செய்த பெட்டியில் கோவையில் இருந்து ஒருவர் வந்துள்ளார். நள்ளிரவு நேரம் ஓடும் ரயிலில் அந்த நபர் பெண்களை நோட்டமிட்டுள்ளார். அபிலாஷின் குடும்பத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி இருக்கையில் படுத்திருக்கின்றார். அந்த சிறுமி நன்கு அயர்ந்து தூங்கிய நிலையில் அந்த நபர் பாலியல் சிண்டலில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் இவர் எல்லை மீறி போக சிறுமி வீரிட்டு கத்தியுள்ளார். உறங்கிக்கொண்டிருந்த பயணிகள் திடீரென எழுந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அந்த நபரை பிடித்து வைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதற்குள் ரயில் ஈரோடு ரயில் நிலையத்திற்கு வந்தது. சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட அந்த நபரை ஈரோடு ரயில்வே போலீசார் கைது செய்தனர். இவரைப் பற்றி விசாரிக்கும்போது அதிர்ச்சியாக இருந்தது.
57 வயதான நபரான இவர் பிரேம் ஆனந்த். சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருகிறார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருவதோடு, பாஜக முக்கிய நிர்வாகியாகவும் இருந்துள்ளார். அதைவிட கூடுதலான தகவல் கடந்த 2006ம் வருடம் சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டிருக்கிறார்.
பாஜக ஆட்சியில் பாலியல் குற்றங்கள் பெருகி வருவதோடு அக்கட்சியின் நிர்வாகிகளே இந்த கொடூர செயல்களில் ஈடுபட்டு வருவது பொதுமக்களிடம் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.