திமுகவின் மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம் என தமிழகத்தில் உள்ள சுமார் 12500 ஊராட்சிகளில் மக்களை அழைத்து ஊராட்சி சபை கூட்டத்தை திமுக நடத்திவருகிறது. இந்த ஊராட்சி சபை கூட்டத்தில் திமுக தலைவர், திமுக எம்.எல்.ஏக்கள், திமுக பிரமுகர்கள், அந்த ஊராட்சியை சேர்ந்த திமுக கிளை நிர்வாகிகள் கலந்துக்கொண்டு மக்களின் கோரிக்கைகளை கேட்டு வருகின்றனர்.
மக்கள் தரும் கோரிக்கைகளை மனுவாக எழுதி வாங்கிச்சென்று அரசு அதிகாரிகளிடம் தந்து உடனடியாக செய்ய வேண்டும் என வேண்டுக்கோள் வைத்து வலியுறுத்திவருகின்றனர். அதிகாரிகளும், அதிமுகவினர் எதுவும் செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சில எம்.எல்.ஏக்கள் மக்களின் சில கோரிக்கைகளுக்கு தங்களால் முடிந்த உதவிகளை தனிப்பட்ட முறையில் செய்து வருகின்றனர். அப்படியொரு எம்.எல்.ஏ. செய்த உதவி ஒரு குடும்பத்தையும், அந்த கிராமத்தையும் நெகிழ செய்துள்ளது.
வேலூர் மாவட்டம், இராணிப்பேட்டை அடுத்த பூட்டுதாக்கு என்கிற கிராமத்தில் சில தினங்களுக்கு முன்பு திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ராணிப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏவும், வேலூர் மாவட்ட கிழக்கு பகுதி செயலாளருமான ஆர்.காந்தி கலந்துக்கொண்டு மக்களின் குறைகளை கேட்டார். அப்போது, அந்த கிராமத்தை சேர்ந்த சித்ரா என்கிற பெண்மணி ஒரு மனுவை தந்தார்.
அதில், ''எனது கணவர் பச்சையப்பன் இறந்துவிட்டார். இதனால் என் குடும்பம் வறுமையில் வாடுகிறது. குழந்தைகளை படிக்க வைப்பதில் சிரமமாக உள்ளது. அதனால் எனக்கு ஒரு தையல் இயந்திரம் வாங்கி தந்தால் அதை வைத்து வேலை செய்து என் குடும்பத்தை காப்பாற்றிக்கொள்வேன்'' என மனுவில் எழுதியிருந்தார்.
இதனை படித்துப்பார்த்து கவலையான காந்தி, உடனே தனது உதவியாளர்களிடம், தையல் இயந்திரம் ஒன்றை வாங்கி தர ஏற்பாடு செய்யுங்கள் என்றுள்ளார். அதன்படி அவர்களும் உடனடியாக ஒரு தையல் இயந்திரத்தை வாங்கினர். அதனை பிப்ரவரி 26ந் தேதி மாலை சித்ராவின் வீட்டுக்கு கட்சி நிர்வாகிகளுடன் அந்த கிராமத்துக்கு சென்று, அந்த ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சித்ராவிடம் தையல் இயந்திரத்தை வழங்கியதும், அப்பெண் கண்ணீர் விட்டு நன்றி கூறியுள்ளார். ''உடனே உதவி செய்து அந்த குடும்பத்தின் வாழ்வுக்கு உதவியதற்கு நன்றி'' என அந்த கிராம மக்களும் நன்றி தெரிவித்தனர்.