முகூர்த்தம், வார இறுதி நாட்கள் மற்றும் பக்ரீத் பண்டிகை எனத் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் வெள்ளிக் கிழமை (14/06/2024), சனிக்கிழமை (15/06/2024), ஞாயிற்றுக் கிழமை (16/06/2024) முகூர்த்தம் வார விடுமுறை மற்றும் திங்கள் கிழமை (17/06/2024) பக்ரீத் பண்டிகை எனத் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாகச் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (வெள்ளிக் கிழமை) 545 சிறப்பு பேருந்துகளும், நாளை (சனிக்கிழமை) 585 சிறப்பு பேருந்துகளும் மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) 140 சிறப்பு பேருந்துகளும் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 17/06/2024 (திங்கள் கிழமை) அன்று பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு 705 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் வார இறுதி நாட்களை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு இன்று 15 பேருந்துகளும் நாளை 15 பேருந்துகளும் ஆக 30 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதே போன்று திங்கள் அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் மொபைல் செயலி (Mobile App) மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.