முந்திரி தொழில் செய்யும் தொழிலாளர்களுக்குத் தனி நலவாரியம் ஏற்படுத்த வேண்டும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசனிடம் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர், “நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் முந்திரி தொழிலில் ஈடுபடும் அமைப்பு சாரா உடலுழைப்பு தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர். இதுவரை உடலுழைப்பு தொழிலாளர்கள் நல வாரியத்தில் சுமார் 3,000 தொழிலாளர்கள் மட்டும் பதிவுசெய்து பயனடைந்து வருவதாக தெரிகிறது. ஆனால் கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முந்திரி தொடர்புடைய அனைத்து பணிகளிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
மேலும் தமிழ்நாட்டில் முந்திரி தொடர்பான தொழிலில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் அடிக்கடி ஏற்படும் இயற்கை சீற்றத்தால் முந்திரி மரங்கள் வேரோடு சாய்ந்து அதிகளவில் பாதிப்பு ஏற்படுவதால், முந்திரி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம், உடல்நலம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே மேற்கண்ட முந்திரி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, முந்திரி உடலுழைப்பு தொழிலாளர்கள் குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதிசெய்ய, முந்திரி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்குத் தனியாக ஒரு தொழிலாளர் நலவாரியம் அமைத்துத் தர வேண்டும். முந்திரியைப் பதப்படுத்தி, கொட்டையிலிருந்து முந்திரி பருப்புகளைப் பிரித்து, அதனை வியாபாரம் செய்யும் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகின்றன.
அவ்வாறு செயல்படும் தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் இருந்து 0.3% செஸ் வரி வசூல் செய்தால், மேற்கண்ட நலவாரியத்துக்கான நிதி ஆதாரம் ஏற்படுத்தி, அதன் மூலம் முந்திரி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படவும், அவர்களின் சமூக நலன் காத்திடவும் முந்திரி தொழிலாளர் நலவாரியம் அமைத்திட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சபா. பாலமுருகன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன் ஆகியோர் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், “பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தற்போது இயங்கிவரும் கட்டடம் 1962இல் கட்டப்பட்டது. பல ஆண்டுகள் கடந்ததால் பழுதடைந்துள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் பல்வேறு திட்ட பிரிவுகள் மற்றும் பொறியாளர் அலுவலகம் ஆகியோரது எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான இடவசதி இல்லை.
ஒன்றிய குழு கூட்டம் அறை மற்றும் அலுவலகக் கூட்ட அறை தனித்தனியாக இல்லாத நிலையில் இடப்பற்றாக்குறை மற்றும் பழுதடைந்த நிலையில் அலுவலகம் இயங்கிவருகிறது. கணினி வசதி உள்ளிட்ட நவீன வசதிகளை ஏற்படுத்த போதுமான வசதிகளின்றி உள்ளது. மேலும், பல்வேறு பணிகளுக்காக அலுவலகம் வந்து செல்லும் பொது மக்களுக்கு சிரமமாக உள்ளது. எனவே ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் கட்ட அனுமதி அளித்து உதவிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.