மறைமலையடிகளார் பெயரில் நாகையில் தனித் தமிழ் ஆராய்ச்சியகம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று நாகை எம்எல்ஏவும், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளருமான தமிமுன் அன்சாரி, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மா.பாண்டியராஜனிடம் கோரிக்கை வைத்தார்.
பாண்டியராஜனை தமிமுன் அன்சாரி இன்று சந்தித்தார். அப்போது அவர், நாகப்பட்டினத்தில் பிறந்த மறைமலையடிகளார் பெயரில் நாகையில் தனித் தமிழ் ஆராய்ச்சியகம் ஒன்றை அமைக்க வேண்டும். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணை நிறுவனமாக இதை நடத்துவது குறித்து முதல்வரிடம் பேச வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.
அது போல் தமிழுக்கு 16 ஆயிரம் அறிவியல் தமிழ் சொற்களை வழங்கிய மணவை. முஸ்தபா பெயரில் "அறிவியல் தமிழர்" விருது வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
கவிஞர் நா.காமராசன் அவர்களின் குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதால், அவரது கவிதை நூல்களை அரசுடைமையாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
அது போல் பிரபல பாடகர் நாகூர் அனிபா, கவிக்கோ அப்துல் ரஹ்மான், மக்கள் கவிஞர் இன்குலாப் ஆகியோரின் பெயரால் தமிழக அரசு விருதுகளை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கையளித்தார்.
இவையனைத்தையும் தான் சட்டமன்றத்தில் பேசியதாகவும் தமிமுன் அன்சாரி நினைவூட்டினார்.
இது குறித்து முதல்வரிடம் பேசி துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சர் உறுதியளித்ததாக தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.