Skip to main content

ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். இருவரும் இணைந்துதான் உள்ளார்கள்..! -சிரித்தபடியே பேசிய செங்கோட்டையன்!

Published on 29/06/2019 | Edited on 29/06/2019


"பொய்யை சொன்னாலும் பொறுந்துகிறபடி சொல்ல வேண்டும் என்பது வழக்க மொழியாக இருந்து வருகிறது. அந்த மொழியை மிகச் சரியாக கடைபிடித்து வருகிறார் அமைச்சரான அண்ணன் செங்கோட்டையனுங்க.." என வெளிப்படையாகவே பேசுகிறார்கள் ஈரோடு அ.தி.மு.க. ர.ர.க்கள். கழுவுற மீனில் நழுவுற மீனாக அரசியல் சம்பந்தமான கேள்விகளை தவிர்த்து அந்த இடத்தை விட்டு பறந்து செல்பவரான மூத்த அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஈரோட்டில்  நிருபர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது அவர் கூறியது.

"தமிழகம் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குகிறது. மேலும் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும் திகழ்கிறது.

sengkottaiyan


பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவதற்காக கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல்வர்,ஆணை பிறப்பித்தனர். அது தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது. எனது பொறுப்பில் உள்ள பள்ளிக்கல்வி துறையை பொறுத்தவரை பதினொன்று மற்றும் பனிரென்டாம் வகுப்பு மாணவர்களுக்கு  இப்போது கொடுக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தின்படி 240 நாட்கள் அவர்கள் படிக்க வேண்டியுள்ளது. பள்ளியின் மொத்த நாட்கள் 210 தான். ஆகவே பிளஸ்-1 ,பிளஸ்-2 மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கி லேப்-டாப்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 2017 -18 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் கொஞ்சம் பொறுத்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்கள் அனைவரும் கல்லூரிக்கு சென்று உள்ளனர். பிளஸ் -2 முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டித்தான் இப்போதுள்ள பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

 

sengkottaiyan interview

அவர்களுக்கு லேப்-டாப்கள் வழங்கும்போது ஓய்வு நேரங்களில் அவற்றை டவுன்லோடு செய்து மாணவர்கள் படிக்க ஏதுவாக இருக்கும். 2017 -18 ஆம் ஆண்டு படித்த மாணவ - மாணவிகளுக்கு இன்னும் மூன்று மாதத்தில் லேப்டாப்புகள் உறுதியாக வழங்கப்படும். தமிழ்நாட்டை பொருத்தவரை பல நல்ல திட்டங்களை அறிவிக்க இருக்கிறோம்.  சட்டமன்ற கூட்ட தொடரில் வருகிற  2 -ந் தேதி என்னுடைய துறை சம்பந்தமான மானியம் கோரிக்கை நடைபெற உள்ளது.  பள்ளிக்கல்வித்துறை பொருத்தவரை கல்விக்கு என்று தனியாக தொலைக்காட்சி தொடங்க அனுமதி கோரி இருக்கிறோம். கடந்த சில நாள்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தையடுத்த  திம்பம்மலைப் பகுதியில் வனத்துறை சார்பில் சுங்க கட்டணம் வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.  பின்னர் முதல்வரும் வனத்துறை அமைச்சரும் எடுத்துக் கூறி மாவட்ட கலெக்டர் மூலம் சுங்கக் கட்டணம் வசூல் செய்வது ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் இரவு நேரத்தில் லாரிகள் இயக்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம்  தமிழகம், கர்நாடகா இரு மாநில போக்குவரத்து தங்கு தடையின்றி நடைபெற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சுங்க கட்டண விஷயத்தை தூண்டிவிட்டு போராட்டம் நடத்த சிலர் நினைத்தனர் ஆனால் அது பலிக்கவில்லை." இவ்வாறு பேசிய அமைச்சர் செங்கோட்டையனிடம் "சார் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தி.மு.க. திரும்ப பெற்றுள்ளதே..? "ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்..." "பா.ஜ.க.விடம்..." "மத்திய அமைச்சரவையில்.." என பல கேள்விகள் தொடர்ந்து கேட்க நிருபர்கள் முயல சிரித்துக் கொண்டே கும்பிடு போட்ட அமைச்சர் செங்கோட்டையன் "முதல்வர் ஈ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ். இணைந்து பணியாற்றி தமிழகத்தை சிறந்த மாநிலமாக கொண்டு செல்கிறார்கள்.." என அவர் சொல்லி முடிக்கும் முன்பே கூட்டத்தில் இருந்த ர.ர. ஒருவர் கல கல வென சிரிக்க செங்கோட்டையனாலும் சிரிப்பை அடக்க முடியாமல் காருக்குள் ஏறி கண்ணாடியை ஏற்றிக் கொண்டு அவர் சொன்ன பதிலை அவரே நினைத்து வாய் விட்டு சிரித்துக் கொண்டே போனார்.
 

அண்ணன் கழுவுற மீனில் நழுவுற மீனப்பா.." என ர.ர.க்கள் மீண்டும் கமெண்ட் அடித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்