திருச்சி மாநகர நுண்ணறிவு பிரிவில் காவலராக இருப்பவர் செல்வராணி. இவர் கவி செல்வா என்கிற பெயரில் கவிதை, எழுதி வருகிறார். தமிழகம் முழுவதும் கவிதை வாசித்தும் வருகிறார். இந்த நிலையில் செல்வராணி கலைஞர் மறைவிற்கு தன்னுடைய முகநூல் பக்கத்தில் கவிதை வாசித்து பதிவேற்றம் செய்திருக்கிறார். இவருடைய கவிதை வெளியானவுடன் வைரலாக தமிழகம் முழுவதும் பரவியது.
இவர் கவிதை முகநூலில் வெளியானதும் திருச்சி மாநகர நுண்ணறிவு பிரிவில் இருந்து மெமோ வந்தது. எதற்காக கலைஞருக்கு கவிதை வாசித்தீர்கள் என்று மெமோ கொடுத்து அடுத்த சில நாட்களில் திருச்சியில் உள்ள 8 இன்ஸ்பெக்டர்கள், 23 காவலர்கள் தீடீர் என பணியிடை மாற்றம் செய்தார் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ். இதில் செல்வராணிக்கும் சேர்த்து பணியிடை மாற்றம் செய்தார்.
கலைஞர் மறைவிற்கு பிரதமர் மற்றும் 11 மாநில முதல்வர் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய பிரமுகர் நேரடியாக அஞ்சலி செலுத்திய நிலையில் காவல்துறையில் உள்ள ஒருவர் கலைஞருக்கு கவிதை வாசித்தார் என்பதற்காக பணியிட மாற்றம் என்பது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த நிலையில் தமிழின் மூத்த தலைவர் மறைவிற்கு இரங்கல் கவிதை வாசித்த என்னை பணியிட மாற்றம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அப்படி என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தியது தவறு என்று சொல்லும் நிர்வாகத்திற்கு கீழ் எனக்கு பணிபுரிய விருப்பம் இல்லை என விருப்ப ஓய்வு பெறுவதாக கடிதம் எழுதினார். தொடர்ந்து பணிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் 3 மாத தொடர் மருத்துவ விடுப்பில் இருந்தார். இந்த நிலையில் செல்வராணியின் விருப்ப ஓய்வை ஏற்றுக்கொள்வதாக மாநகர ஆணையர் அலுவலகத்தில் இருந்து கடிதம் செல்வராணிக்கு அனுப்பட்டது.
இது குறித்து செல்வராணி கலைஞருக்கு இரங்கல் கவிதை பாடி எனக்கு விளக்கம் கேட்டு மெமோ அனுப்பியிருந்தனர். அதற்கு விளக்கம் அளிப்பதற்குள் எனக்கு பணியிட மாற்றம் செய்தார்கள். விளக்கம் கொடுப்பதற்குள் எப்படி பணியிட மாற்றம் செய்யலாம் என அதிகாரியிடம் முறையிட்டும் சரியான பதில் இல்லை. இதனால் என்னுடைய பேச்சுரிமை பறிக்கப்பட்டதாக உணர்ந்தேன். மீண்டும் பணியில் சேர்ந்தால் பழிவாங்கும் நடவடிக்கை நடக்கும் என உணர்ந்தேன். எனவே என் குடும்பம் நலன் கருதி நான் பணியிலிருந்து விலகினேன். இதற்கு முன்பு ஜெயலலிதா மறைந்த போது நான் கவிதை வாசித்தேன் அப்போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.