மதுரையில் இன்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்.
“கூட்டுறவு வங்கியில் நடந்த முறைகேடுகளை முதலில் கண்டுபிடித்தது நாங்கதான். முதல்ல புகார் கொடுத்தோம். சம்பந்தப்பட்டவங்க மீது கடுமையா நடவடிக்கை எடுத்திருக்கோம். ஸ்டாலின் இடைத்தேர்தல் குறித்து சொல்லக்கூடிய குற்றச்சாட்டுகள் எல்லாம் அரசியலுக்காகத்தானே தவிர உண்மையல்ல. திமுகதான் திருமங்கலம் ஃபார்முலான்னு கொண்டு வந்தது. நாடே சிரித்தது. ஊடகங்களெல்லாம் கேலி பண்ணியது. அன்றைக்கு இந்த மு.க.ஸ்டாலின் எங்கே போயிருந்தார்? முகத்தை எங்கே வைத்திருந்தார்? இவங்க ஆட்சிக்காலத்துல தேர்தல் எப்படி இருந்தது? ரவுடித்தனம்.. மக்களை பயமுறுத்தி ஓட்டு வாங்கினாங்க. இங்கே அப்படி இல்ல. எடப்பாடியார் ஜனநாயகத்தைக் காத்துக்கொண்டிருக்கிறார். துணை முதலமைச்சர் துணையிருக்கிறார்.
அமைச்சரவை மாற்றம்கிறது முதலமைச்சர் கையில் இருக்கிறது. முதலமைச்சர் நினைத்தால் எப்ப வேணும்னாலும் மாற்றலாம். யாரை வேணும்னாலும் எடுக்கலாம். அவர் பார்த்து எதுவும் பண்ணலாம். அது அவருடைய அதிகாரத்துக்கு உட்பட்டது. முன்னால அம்மா வந்து உடனுக்குடனே யாரையும் மந்திரில இருந்து மாற்றிவிடுவார். எம்.ஜி.ஆர். காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் அவர்கள் மக்களுடைய ஆளுமை மிக்கவர்கள். மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள். அவர்களுக்கு எது நல்லது? எது கெட்டது? என்று தெரியும். ஜெயலலிதாவுக்கு ஒருவர் குறித்து தவறானவர் என்று தகவல் வந்தால், அதைக்கேட்டு நடவடிக்கை எடுப்பார். ஜெயலலிதா யாரையும் உடனே எடுத்தது கிடையாது. யாரு தவறு பண்ணுனாலும் அவங்ககிட்ட விளக்கம் கேட்டு, அவங்க திருப்தியா சொன்னாங்கன்னா விட்ருவாங்க. திருப்தியா சொல்லலைன்னா நடவடிக்கை எடுப்பாங்க. ஜெயலலிதா காலத்துலயும் அப்படித்தான். இப்பவும் அப்படித்தான் நடக்குது.
ரஜினியைப் பொறுத்தமட்டிலும் ஒரு நல்ல மனம் படைத்தவர். மனசுக்கு பட்டதை சொல்லக்கூடியவர். அவருக்கு இன்றைக்கு மத்திய அரசு வாழ்நாள் சாதனையாளர் விருது தந்திருக்கிறது. அவருக்கு அதிமுக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நான் ரசிகன் இல்லியா? என்னுடைய சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.
“ஜெயலலிதா வந்து உடனுக்குடனே யாரையும் மந்திரில இருந்து மாற்றிவிடுவார்.” என்று முதலில் சொல்லிவிட்டு, தான் சொன்னதை மறந்தவராக “ஜெயலலிதா யாரையும் உடனே எடுத்தது கிடையாது.” என்று அதே பேட்டியில் பல்டி அடித்தார். பேட்டியினூடே “தமிழ்நாட்டு மக்கள் அறிவாளிகள்; தெளிந்தவர்கள்; அறிவில் தெளிவோடு இருக்கிறவர்கள்.” என்று கூறி சிரித்தார்.
வைகை அணை நீர் ஆவியாவதைத் தடுக்க தண்ணீரின் மேல் பரப்பில் தெர்மாகூல் அட்டைகளை மிதக்க விட்டவராயிற்றே! தெளிவாகப் பேட்டி அளிக்கவில்லையோ என்ற சந்தேகம் அவருக்கே வந்துவிட்டதோ, என்னவோ? “நான் பேசியது தெளிவா புரிஞ்சிதா? மக்களுக்கு இதை தெளிவா சுட்டிக்காட்டுங்க..” என்று ஊடகத்தினரிடம் கேட்டுக்கொண்டார் படு உஷாராக!