Skip to main content

‘அம்மையார் சாந்தாவின் மறைவு மருத்துவ உலகிற்கே பேரிழப்பு’ - சீமான் 

Published on 19/01/2021 | Edited on 19/01/2021

 

Seeman condolence for Dr santa
                                                           கோப்புப் படம்


சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தா உடல்நலக்குறைவு காரணமாக இன்று (19.01.2021) காலை காலமானார். அவருக்கு, பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். 

 

‘தன் வாழ்வின் பெரும்பகுதியை மருத்துவத்துறைக்காகவே செலவிட்டு, 67 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக மருத்துவச் சேவையாற்றி, தனது இறுதிக்காலம் வரை மக்கள் தொண்டாற்றியவர் அம்மையார் சாந்தா’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மறைந்த டாக்டர் சாந்தாவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

 

மேலும் அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘அடையாறு புற்றுநோய் மருத்துவ நிறுவனத் தலைவர் அம்மையார் மருத்துவர் சாந்தா, உடல்நலக்குறைவு காரணமாக மறைவுற்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன். அம்மையாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், மருத்துவத்துறையினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரில் பங்கெடுக்கிறேன்.

 

நாடறியப்பட்ட புற்றுநோய் மருத்துவரான அம்மையார் சாந்தா, இந்திய அளவில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதில் முன்னோடியாகத் திகழ்ந்தவராவார். அரசு மற்றும் தனியார் இணைந்து புற்றுநோய் சிகிச்சைக்குக் குறைந்த செலவிலும், இலவசமாகவும் தரமான சிகிச்சையளித்து இலட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்றவராவார். 

 

அடையாறு புற்றுநோய் நிறுவனத்தை வளர்த்தெடுக்கத் தொடக்கக்காலம் முதல் அரும்பாடுபட்டு, தனது வாழ்வையே ஒட்டுமொத்தமாக மருத்துவச்சேவைக்காக அர்ப்பணித்தவராவார். தன் வாழ்வின் பெரும்பகுதியை மருத்துவத்துறைக்காகவே செலவிட்டு, 67 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக மருத்துவச் சேவையாற்றி, தனது இறுதிக்காலம் வரை மக்கள் தொண்டாற்றியவர் அம்மையார் சாந்தா. தனது மகத்தான சேவைக்காக, 'மகசேசே', ‘பத்மபூஷன்’, ‘பத்மவிபூஷன்’ என விருதுகள் பலவற்றைப் பெற்று மருத்துவத்துறையில் மாபெரும் ஆளுமையாகத் திகழ்ந்த அம்மையார் சாந்தாவின் மறைவு மருத்துவ உலகிற்கே ஏற்பட்ட பேரிழப்பென்றால், அது மிகையில்லை’ என்று தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்