திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தளமாகக் கொடைக்கானல் விளங்குகிறது. இதன் காரணமாகவும், வார இறுதி விடுமுறையை முன்னிட்டும், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இத்தகைய சூழலில் தான், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் சார்பில் கொடைக்கானலில் டி.ஜே. பார்ட்டி, ஃபையர் கேம்ப் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தடையை மீறி கோடைக்கானல் ஏழு ரோடு சந்திப்பில் உள்ள பிரபல தனியார் விடுதியின் கலையரங்கத்தில் டி.ஜே. பார்ட்டி நிகழ்ச்சி நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்நிலையில் இது தொடர்பாகக் கொடைக்கானல் கோட்டாட்சியர் சிவராமன், காவல் துணை கண்காணிப்பாளர் மதுமதி, நகராட்சி ஆணையர் சத்திய நாராயண சத்தியநாதன் ஆகியோர் நேரில் சோதனை அப்பகுதியில் உள்ள விடுதிகளைத் தீவிரமான கண்காணிப்பு பணியிலும், சோதனைகளும் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு விடுதி உள்ள கலையரங்கில் கடந்த சில தினங்களாகத் தடையை மீறி டி.ஜே, நிகழ்ச்சி நடத்தி வந்தது தெரிய வந்தது. இந்த சோதனையின் போது கேரளாவைச் சேர்ந்த மாணவ மாணவிகள் நடனமாடிக் கொண்டிருந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து டிஸ்கோ ஜாக்கி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மற்றும் விடுதி மேலாளர் உள்ளிட்டவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து ஏற்பாட்டாளர் மிதுன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதோடு தடையை மீறி டி.ஜே. நிகழ்ச்சி நடைபெற்ற விடுதி அரங்குக்குச் சீல் வைக்கப்பட்டன. கொடைக்கானலில் தடையை மீறி டி.ஜே. நிகழ்ச்சியை நடத்திய விடுதி அரங்குக்குச் சீல் வைக்கப்பட்ட சம்பவம் கொடைக்கானலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.