புதுச்சேரி மாநிலத்தில் வருகிற 5-ஆம் தேதியிலிருந்து பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்கள் சென்று சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம் என்றும், அதற்காக பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கும் என்றும் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடா உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் பள்ளிகள் திறப்புக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி புதுவை மாநில அமைப்பாளர் சி.ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "புதுச்சேரியில் கரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. தேசிய அளவில் 1.6 சதவீதம் இருக்கும் நிலையில் தமிழகத்தில் 1.68 சதவீதமாக இருக்கிறது. ஆனால், புதுச்சேரியில் இறப்பு விகிதம் 1.91 சதவீதமாக உள்ளது. மக்கள் தொகையில் 10 ஆயிரம் பேரில் 188 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது புதுச்சேரி மாநிலத்தில்தான். தமிழகத்தைவிட நோய் தொற்று அதிகமாக உள்ள புதுச்சேரியில் வரும் 5-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிக்கூட அறைகள், வளாகங்கள் இதுவரை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படவில்லை. இந்நிலையில் தனியார் பள்ளிக்கூட உரிமையாளர்களுக்கு சாதகமான ஒரு நிலைப்பாட்டை மாநில அரசு எடுத்து பள்ளி திறப்பை அறிவித்துள்ளது. மத்திய அரசு 15-ஆம் தேதிக்கு மேல் பள்ளிகள் திறக்கலாம் என அறிவித்திருந்த நிலையில் புதுச்சேரி அரசு முன்கூட்டியே திறப்பதற்கு என்ன அவசரம் என்று தெரியவில்லை. மாணவர்களின் உயிர் சம்பந்தமான விவகாரத்தில் அரசுக்கு அக்கறை துளியும் இல்லாமல் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
மாணவர்கள் சந்தேகங்களை கேட்க மட்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றது என்று கல்வித்துறை இயக்குனர் ருத்ர கவுடா அறிவித்துள்ளார். புதுச்சேரியில் ஐந்து பேரில் ஒருவருக்கு கரோனா பரவும் என்று ஜிப்மர் மருத்துவமனை ஏற்கனவே எச்சரித்த நிலையில் பள்ளிகளை திறந்தால், மாணவர்கள் மூலம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கரோனா வைரஸ் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கரோனா தொற்றால் மாணவர்கள் பாதிக்கப்பட்டால் அதற்கு காரணமாக உள்ள கல்வித்துறை இயக்குனர் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து காவல்துறை தலைமை அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மக்களைத் திரட்டி பெரும் போராட்டத்தை கையிலெடுக்கும் என எச்சரிக்கையாக தெரிவிக்கின்றோம்" என்று அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.